அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது 16வது ஆண்டு நினைவு தினம்!

12472242_10156253146595012_4749249832793914586_nவரலாற்றில் குமார் பொன்னம்பலம் அவர்களுக்கு தமிழர்களாகிய நாம் ஆற்ற வேண்டியது வெறுமனே அஞ்சலி மட்டுமல்ல. அவரது சிங்கக் குகையில் இருந்தும் அஞ்சாமல் ஒலித்த சிம்மக் குரலுக்கு கொடுக்கப்பட்ட அநியாயமான படுகொலைக்கு இன்றளவும் கிடைக்காத நீதியை பெற்றுக் கொடுப்பதே தமிழர்களின் முதன்மைக் கடனாகும்.

குமார் பொன்னம்பலம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள் ஆகியும் கொலையாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை, வழக்கு விசாரணையும் மூடப்பட்டு விட்டது.

கொழும்பு நகரில் குமார் பொன்னம்பலம், சிவராம், லசந்த விக்கிரமதுங்க, ரவிராஜ், மகேஸ்வரன், மட்டக்களப்பில் நடேசன், ஜோசப் பரராசசிங்கம், திருமலையில் விக்னேஸ்வரன், சுகிரதராஜன், யாழ்ப்பாணத்தில் நிமலராஜன், சிவமகாராசா, ரஜீவர்மன் போன்றோரின் படுகொலைகள் எவற்றுக்கும் இன்று வரை நீதியும் இல்லை. விசாரணையும் இல்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவும் இல்லை.

அரசு தான் மறந்தது போல் மறைக்க நினைக்கின்றது என்றால் நம்மவர்கள்…??? எதிர்கட்சியில் பெயரளவில் இருப்பவர்கள் இது குறித்த கேள்விகளை தட்டிக் கேட்டார்களா?

அன்று சந்திரிகாவின் இனவெறிப் பேச்சுகளை வெளிப்படையாக குமார் பொன்னம்பலம் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் சுட்டிக் காட்டி கண்டித்து ஜனாதிபதி சந்திரிக்காவை மிகக்கடுமையாக சாடி வந்தார். அந்த வேளையிலும் கூட தமிழர் விடுதலைக் கூட்டணி “தமிழர்களை கொல்வேன் என சந்திரிக்கா அம்மையார் சொல்லவில்லை. அவர் தமிழர்களை நியாயமாக நடத்தும் ஒரு தலைவர்!” என அறிக்கை விட்டு பச்சோந்தித்தனத்தால் தமிழர்க்கு துரோகம் இளைத்தது. இன்றும் அதே நல்லாட்சி பட்டம் செலுத்தி அரசை காக்கும் துரோகம் நிகழ்த்தப் படுகின்றது.

அன்று குமார் பொன்னம்பலம் சந்திரிகாவை மட்டுமல்ல நீலன் திருச்செல்வம் செய்த ஏமாற்று வேலைகளையும் அம்பலப்படுத்தினார். அவர் மட்டுமன்றி அன்றைய சந்திரிகா அரசை கண்டித்த லசங்க, ஜோசப் பரராஜ சிங்கம் போன்றோரும் கொல்லப்பட்டார்கள். அன்றும் நீதி மறுக்கப்பட்டது. இன்று வரையும் நீதி மீட்கப் படவில்லை. கேட்டால் நல்லாட்சி. அதற்கு எம்மவர்கள் நற்சாட்சி பத்திரம் வழங்குகின்றார்கள்.

தொடர்ந்து செல்லும் துரோகங்களுக்கும் பகைமைக்கும் இன்னமும் எத்தனை குமார் பொன்னம்பலங்கள் பலியாவார்களோ. அஞ்சலிக் கணங்களில் சிந்திப்போமா? புதியதோர் அரசியல் போக்கிற்கு சிந்திக்வேண்டிய கட்டாய நிலைப்பாட்டில் தமிழர்களாகிய நாம் நிண்டுகொண்டு இருக்கின்றோம்.

தகவல் மூலம்-

செந்தமிழினி பிரபாகரன்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply