அமெரிக்க ஆளுநர்களுக்கு கனேடிய பிரதமர் எச்சரிக்கை!

அமெரிக்க ஆளுநர்களுக்கு கனேடிய பிரதமர் எச்சரிக்கை!வட அமெரிக்க வர்த்தகத்தில் குறுக்கு வழிகளை முயற்சிக்க வேண்டாம் என்று அமெரிக்க ஆளுநர்களை கனேடிய பிரதமர் எச்சரித்துள்ளார்.

றோட் ஐலன்டில் நடைபெற்ற அமெரிக்க ஆளுநர்கள் மாநாட்டில் நேற்று கனேடிய மத்திய-மாநில பிரதிநிதிகள் சகிதம் பங்கேற்று உரையாற்றும்போதே பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான, 23 ஆண்டுகள் பழமையான வட அமெரிக்க தடையற்றற வர்த்தக உடன்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவரும் நிலையில், அதில் அரசியல் ரீதியிலான குறுக்குவழிகளை முயற்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் ரீதியிலான கவர்ச்சிகளை காட்டி, இந்த வர்த்தக நடவடிக்கைகளில் குறுக்கு வழிகளை ஏற்படுத்த முயற்சிக்காது இருப்பதே, இந்த விடயத்தில் நீதியாக நடந்து கொள்வதற்கு சான்றாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமான வர்த்தக தடைகள், அரசாங்க நடவடிக்கைகளில் தனியாரின் அதிகரித்த தலையீடுகள் போன்றன, நீண்டகால ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, குறுங்கால ஆரோக்கியத்துக்கு கூட நல்லதல்ல எனவும், அவ்வாறான கொள்கைகள் வளர்ச்சியை கொன்றுவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்கு போட்டியாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இறுதியில் இரண்டு தரப்புக்குமே பாதகமானதாகவே முடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

நேற்றைய இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ தலைமையிலான கனேடிய பிரதிநிதிகள், அமெரிக்காவின் சில மாநில ஆளுநர்கள் மற்றும் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகியோரை நேரில் தனித்தனியே சந்தித்தும் பேச்சுக்களை நடாத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் பேச்சுக்களின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ரூடோ, இரண்டு நாடுகளுக்கிடையே மில்லியன் கணக்கான பொருட்கள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றினை கொண்டுள்ள இந்த முக்கியமான வர்த்தக நடவடிக்கை தொடரும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply