இது கூத்தல்ல நிஜம்..!

ஆடிக் காற்று பாணன்குளத்தில்பட்டுத் தெறித்ததோ இல்லையோ பார்வையாளர்களின் எண்ணங்களை பட்டமாய் பறக்கவைத்த ஆற்றுகையே “இது கூத்தல்ல நிஜம்”. செயற்றிறன் அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் சமகாலத்தின் தேவையொன்றினை பக்குவமாய் பறைசாற்றிய பொழுது நேற்று மாலை ஏழு மணி.

ராணி என்கின்ற ஒரு தற்காலத்து சாதாரண தாய் ஒருத்தியின் கதையை காவியத் தலைவி பாஞ்சாலியுடன் தொடர்புபடுத்தி மக்கள் அனைவரும் பார்த்து உணரவேண்டிய விதமாய் அரங்கிற்கு படைத்த முறைமை அற்புதம். பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளின் வடிவங்களையும் விளைவுகளையும் தோலுரித்துக்காட்டும் நவீன அளிக்கை இது.

தினப் பத்திரிகைகளில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் நடந்தேறும் நெஞ்சம் பொறுக்காச் செய்திகளை பார்த்து கையாலாகப் பிறவித் துன்பத்தினை அனுபவிக்கும் நமக்கு கோடைமழையாய் ஒரு விழிப்புணர்வும் கலந்துரையாடலும் எல்லோரையும் ஒரு கணம் சிந்திக்கவைத்தது. கதைபற்றி நான் சொல்லித் தெரிவதற்கில்லை. நீங்களும் நானும் கண்டும்காணமலும் சென்ற தருணங்களை மறுமுறை மீட்டித்தான் பாருங்களேன்.

எங்கள் மண்ணில் எங்கெல்லாம் தேவை உணரப்படுகிறதோ அங்கெல்லாம் ராணி பயணிக்க வேண்டியவள். ராணியின் வரவு எத்தனையோ பெருமூச்செறியும் பெண்களின் வாழ்வில் நேர்ப்பாங்கான மாற்றத்தினை ஏற்படுத்தப்போகிறது என்பது மறுக்கப்படமுடியாத உண்மை.

ராணியின் கோபத்தை தணிக்க அவள் உதிர்த்த வார்த்தைகள் “…எல்லாவற்றையும் போட்டு கொடும்பாவி எரிக்க வேணும்…” என்கின்றபோது ராணியின் முகத்தில் தோன்றும் இயலாமை எமது தாய் மண்ணில் வாழும் எத்தனையோ பெண் தலைமைதாங்கும் குடும்பங்களையும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் புடம்போட்டுக்காட்டின. வாழ்வின் வசந்தத்திற்காய் ஏங்கும் பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் தொடர்பில் நாலுபேர் கூடிக் கலந்தாலோசித்து புள்ளிவிபரம் வெளியிட்டால் மாத்திரம் போதாது. செயலில் காட்டிட ஒரு செயற்றிறன் அரங்க இயக்கமும் தேவை.

மாற்றம் ஒன்றே மாறாதது! பெண்கள் வலுவூட்டல் செயற்பாட்டாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் செயற்பாட்டாளர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் அடங்கலாக போருக்குப் பின்னரான நிகழ்ச்சி நிரலோடு வாழும் நாமெல்லாம் ஆற்றுகையைக்கண்டு ஆளுக்கொரு பரிந்துரையாளர்களாக மாறவும், நேர்ப்பாங்கான மாற்றத்தினை எமது சமூக மட்டத்தில் ஏற்படுத்தத் திடம்கொள்ளவைக்கும் ஒரு குறியீட்டு, கலந்துரையாடல் அளிக்கையாக “இது கூத்தல்ல நிஜம்” எமது மண்ணில் உலாவர இருக்கிறது.

கிராமத்தில் இடம்பெறும் ஆற்றுகையின்போது பெண்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் ஆற்றுகை தொடர்பில் வரவேற்கப்பட வேண்டியவை. இது விடயமாக ஆண்களுக்கும் அளப்பரிய பங்கு உண்டு என்பதனை உணரப்பண்ணவேண்டும். ஏலவே பார்வையாளர்கள் கருத்துரைத்த முக்கிய விடயங்கள் கவணத்தில் கொள்ளப்படவேண்டியவை. மற்றும் ஒரு கிராமத்து ஆற்றுகையின் சுவாரசியமான விடயங்களோடு உங்களை மறுபடியும் சந்திப்பேன்.

ராணிகளின் விடயத்தில் ரகளைகள் வருவது சகஜம் என்பதற்காக அரங்கம் ஓயப்போவதில்லை. அவர்களுடன் இணைந்து என் பேனாவும் தூங்கப்போவதில்லை.
10371947_10153442762176730_5700179343861677246_n 11737952_10153442762166730_4721500397960175471_n 11745460_10153442761846730_724173735795389329_n 11752519_10153442761746730_7299013703312803604_n 11752571_10153442761591730_7514627390117864307_n

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply