இலங்கையால் விடுவிக்கப்பட்ட ஆறு படகுகள் தமிழகத்தில்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட ஆறு விசைப் படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு சனிக்கிழமை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கோட்டுச்சேரி மேடு சிவராமனுக்கு சொந்தமான ஒரு விசைப்படகு, கிளிஞ்சல்மேடு செல்வமணிக்கு சொந்தமான 2, மதியழகன் 1, காரைக்கால்மேடு தங்கதுரை, குணசேகரன் ஆகியோரின் தலா 1 விசைப்படகுகள் என மொத்தம் 6 விசைப்படகுகள் கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டில் எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டன.

இவற்றை மீட்டுத்தருமாறு மீனவர்கள் இந்திய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இலங்கை வசமிருந்த 42 படகுகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.

இதில், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த படகுகளும் அடங்கும்.

இவற்றை மீட்டுவருவதற்காக காரைக்காலில் இருந்து ஆறு படகுகளில் 36 மீனவர்கள் இலங்கை சென்றனர். அவர்கள், இலங்கை கடற்படையினர் வழிகாட்டுதலில் விடுவிக்கப்பட்ட 6 படகுகளுடன் வெள்ளிக்கிழமை சர்வதேச கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர், இந்திய கடலோரக் காவல்படையினர் உதவியுடன் படகுகளை காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கொண்டுவந்தனர்.

காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை உள்ளிட்ட அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர்.

பின்னர், படகு உரிமையாளர்கள் கூறியது:

சுமார் 3 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இலங்கையில் நிறுத்தப்பட்டிருந்ததால் படகை இயக்க முடியவில்லை.

குறிப்பாக என்ஜின் சேதமாகியிருக்கிறது. வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் எதுவும் படகில் இல்லை.

50 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள படகு தற்போது 10 இலட்சம் இந்திய ரூபாய்க்குக் கூட விலை போகாத நிலையில் உள்ளது.

மீண்டும் படகை கடலுக்கு மீன்பிடிக்க கொண்டு செல்ல வேண்டும் என்றால், பல இலட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். புதுச்சேரி அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply