இளைஞன் மரணம் தொடர்பில் பொலிஸார் விளக்கமறியலில்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட பொலிஸார் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பருத்தித்துறை நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று துன்னாலை பகுதியில் பதற்றநிலை காணப்பட்டது.

உயிரிழந்த இளைஞரின் கிராமமான துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண் பொது மக்களால் அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

வீதிகளின் குறுக்கே டயர்களை தீயிட்டுக் கொழுத்தி மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டதால் துன்னாலை பகுதியில் இன்று பதற்றநிலை காணப்பட்டது.

குறித்த இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்.

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ மற்றும் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இருவரையும் இவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை பதின்நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொலிஸாருக்கு எதிரான பொது மக்களின் நடவடிக்கைகள் காரணமாக துன்னாலை மற்றும் பருத்தித்துறை பகுதியில் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் நாளை (11) துன்னாலையில் நடைபெறவிருப்பதால் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பில் பொலிஸார் அதிகமாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply