என் இசை வாழ்வின் சுவடுகள் – கலாநிதி.தா்ஷனன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று சமூகம் சிலரை நினைப்பதுண்டு. ‘அவருக்கென்ன? ஏதோ விதிவசத்தாலும், அதிஷ்டத்தாலும் சிறு வயதில் இசைத்துறைவிரிவுரையாளர் பதவி அவருக்குக் கிடைக்கப்பெற்றது, வசதியான சம்பளம், வசதியான குடும்பம், வசதியான வாழ்க்கை, சிறுவயதிலேயே மீண்டும் ஒரு அதிஷ்டத்தினால் இசைத்துறைத் தலைவர் பதவி, இதைவிட வேறென்ன வேண்டும் அவருக்கு ?’ என்று பலரும் பார்த்த மாத்திரத்திலேயே தம்முள்ளே கணக்கிட்டுக் கொள்ளுகின்ற புன்னகையிலே என்றுமே நான் இருக்கின்ற போதிலும், நான் கடந்த வந்த பாதைகளும், கடக்க நினைக்கும் பாதைகளும் இசைத்துறையைக் கற்க நினைத்த எவரும் இதுவரை சந்தித்திருக்காதவை என்பதைச் சாதாரணமாக உங்களுக்குச் சொன்னால் ‘கதை விடுகிறான்’என்று உடனேயே மற்றவர்களுக்குச் சொல்லத் தோன்றும்.

Scan 1

யாழ். இந்துக்கல்லூரி கீதம் பாடும் போது

இசைத்துறையை எனது வாழ்க்கைத் துறையாகக் கொள்ள நினைத்த எனது வாழ்விற்கும், எனது இசைக்கும் வந்துபோன தடைகளும், ஆபத்துக்களும் அவற்றை எதிர்கொள்வதற்காகச் சாவின் விளிம்பில் நின்று நான் போராடிய வரலாறுகளும், எனது புன்னகை என்கின்ற இரும்புத்திரைக்குப் பின்னால் ஒளிந்துள்ளன. பொதுவாக, மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளையையும் தமது பெற்றோர் மருத்துவராகவோ, பொறியியலாரகவோ, கணக்கியலாளராகவோ எதிர்பார்க்கும் நிலைப்பாடானது, யாழ்ப்பாணத்தில் ஊறிப்போனதொரு செய்தியாகும்.

எல்லாப் பெற்றோரையும் போலவே எனது அம்மா என்னைப் பொறியியலாளராக ஆக்க வேண்டுமென்ற கனவுடன் எனது 13வது வயதில் என்னை தத்தளிக்க விட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னர் என்னை வளர்த்த எனது மாமாவும் சித்தியுமாகிய எனது அம்மாவின் சகோதரர்கள் மற்றும் எனது தந்தையார் உள்ளிட்ட அனைவருமே நான் இசை கற்பதால் வீணாகிப் போய்விடுவேனென்று 100 சதவீதம் நம்பினார்கள். அந்தப் பயத்தின் காரணமாக ஒவ்வொருவரும் தம் பங்கிற்கு தம்மால் முடிந்தவரை எனது இசைப் பாதையைத் திசைதிருப்பி என்னை மருத்துவராக்க வேண்டுமென்கின்ற வெறியுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

Scan

சைவ பரிபாலன  சபையின், பண்ணிசைப் போட்டிக்கான பரிசு

அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது எதிர்ப்புகளைக் காண்பிப்பதற்காகத் தம்மாலான அதிகூடிய அழுத்தங்களையும், அவற்றின் வெளிப்பாட்டுக்கான கைங்கரியங்களையும் தவறாமல் செய்து கொண்டேயிருந்தார்கள். படிப்பு ஓடாத பெண்பிள்ளைகள், திருமணம் செய்து குடும்பத்திலே வாழ்வதற்குரிய ஒரு தகுதியாக ஆவது இசையையோ, நடனத்தையோ, தையல் கலையையோ கற்பது போல : ஒரு குடும்பத்தைத் தாங்கி நிற்க வேண்டிய தலைமகன் வீணாகிப் போனது, ஒரு பெண் பிள்ளைக்குச் சமமாகிப் போனானே என்று என்னை என் குடும்பத்தினரும், உறவினரும், அயலவரும் கழித்து விட்டார்கள். நான் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தது 18 வயதிலே ஆகும்.

அதாவது உயர்தரக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலே உயிரியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு கற்று முடித்து, 1994ஆம் ஆண்டு எனது உயிரியல் பாடங்களுக்கான உயர்தரப் பரிட்சைக்குத் தோற்றிய பின்,இறுதிப்பாடப் பரீட்சை அன்று மாலையே கலைப் பாடங்களை உயர்தரத்துக்காகக் கற்றுத் தமது பரீட்சைகளைப் பூர்த்தி செய்திருந்த எனது நண்பர்களின் வீடுகளுக்கெல்லாம் சென்று, அவர்களின் குறிப்பேடுகள் அனைத்தையும் கையகப்படுத்திக் கொண்டேன்.

dr_tharsanan

(சுவடுகள் தொடரும்…)

 

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply