கனேடிய பணயக் கைதிகளின் குற்றச்சாட்டு பொய்யானது

தலிபான் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட கனேடியரும் அவருடைய மனைவியும் கூறும் தம்மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபியுல்லாஹ் முஜாகித் கருத்து வெளியிட்டுள்ளார்.

சுமார் ஐந்து வருடங்களாக தலிபான் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருந்த கனேடியர் ஜோசுவா பொய்லும் அவருடைய மனைவியான அமெரிக்காவைச் சேர்ந்த கெய்ட்லான் கோல்மன் மற்றும் அவர்களுடைய மூன்று பிள்ளைகளும் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கனடாவை சென்றடைந்த ஜோசுவா பொய்ல், ஐந்து வருடங்களில் தாம் அனுபவித்த துன்பங்கள் தொடர்பில் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது தலிபானியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதன் காரணமாக தமது சிசு உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள தலிபானியர்கள், கெய்ட்லான் கோல்மன் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் சிகிச்சை அளிக்க முடியாததால் அவருடைய சிசு இயற்கையாகவே அழிந்ததாகவும் அறிக்கையிட்டுள்ளனர்.

மருத்துவ வசதியற்ற தொலைதூர பகுதியில் தாம் இருந்ததால் கெய்ட்லான் கோல்மனுக்கு சிகிச்சை அளிக்க முடியாதிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கட்டாயப்படுத்தல் காரணமாகவே ஜோசுவா பொய்ல் மேற்படி தம்மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply