சொல்லுங்கள் இது இயந்திர வாழ்க்கையா?

busy_lifeசின்ன வயதிலிருந்து இப்போது வரை புலம்பெயர் வாழ்க்கை இயந்திர வாழ்க்கை என்று பலர் புலம்புகிறார்கள். அந்தக்காலத்திலேயே உதயன்-சஞ்சீவி துக்கடா கவிதைகளில் “என்ன இது நரக வாழ்க்கை” என்று கவிதை எழுதி கீழே கனடா கமல் என்று பெயர் போட்டிருப்பார்கள். “கொழும்பு லைப் பிஸி” என்பார்கள். அனேகமான புலப்பெயர் சிறுகதைகளிலும் ராசப்பாவோ, நல்லசிவமோ முதல் பந்தியிலேயே இந்த “இயந்திர வாழ்க்கையை” சபிக்கத் தொடங்கி விடுவார்கள்.

கடந்த பதினைந்து வருடங்களில் புலம்பெயர்ந்து மூன்று ஊர்களில், ஊருக்கு ஐந்தாண்டுகள் வீதம் வசித்துவிட்டேன். அப்படி என்ன தான் இயந்திர வாழ்க்கை? யாரிடமாவது எப்படி அண்ணே எண்டால், தெரியும் தானே பிஸி என்பார்கள். பிஸி, பிஸி, பிஸி, பிஸி புரிவதில்லை. சமயத்தில் வேற்றுலகத்தில் வாசிக்கிறேனோ என்று கூட டவுட்டாக இருக்கும். அப்பிடி என்ன தாண்டா நீங்க  (வேண்டாம் ஜேகே, நீங்க சிறுவர்எழுத்துக்களை படைக்கிற ஆள்! )

ஆங்கிலத்தின் கெட்ட வார்த்தைகளில் ஒன்று இந்த பிஸி (busy). யாழ்ப்பாண வாழ்க்கையை எப்படி அனுபவித்தோம் என்று திகட்ட திகட்ட எழுதிவிட்டதால், மீண்டும் தொண்ணூறுகளில் என்று ஆரம்பித்தால் நீங்கள் அன்பலோ பண்ணிவிடுவீர்கள்.

கொழும்புக்கு போவோம்:-

கொழும்பில் வேலை செய்த போது ஆறு மணிக்கு எழுந்து ஆறரைக்கு பஸ் பிடிச்சாலும் சொய்சாபுரவிலிருந்து நவம் மாவத்தைக்கு செல்வதற்குள் எட்டு மணி தாண்டிவிடும். நிண்டு கொண்டு போக வேண்டும். அங்கே இரவு ஏழு எட்டு மணிவரையும் வேலை செய்துவிட்டு புறப்பட்டு வெள்ளவத்தையில் இறங்கி ரோலக்சில் மட்டின் கொத்து இறக்கீட்டு மீண்டும் வீடு போய்ச்சேர பத்தரை. ஜீடிவி யில் செக்ஸ் அண்ட் த சிட்டியில் சீனுக்காக காத்திருந்து பார்த்துவிட்டு படுத்தா பதினொன்று. மீண்டும் காலை ஆறு மணி. வாசிப்பதற்கே டைம் கிடைப்பதில்லை. பஸ்ஸிலே வாசிக்கலாமென்றால் சீட் கிடைக்காது.

இது பிஸி வாழ்க்கையா என்றால் இல்லவே இல்லை. அதுக்கையும் நிறைய டைம் இருக்கு. ஒரு சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்யவேண்டும்..

காலையில் ஒரு பத்து நிமிஷம் முன்னராக எழுந்து மொரட்டுவ பஸ் ஸ்டாண்டுக்கு போய் சீட் பிடிச்சு உட்கார்ந்தால் ஒண்டரை மணித்தியாலம் சுளையா கிடைக்கும். கொள்ளுப்ப்பிட்டி வருவதற்குள் முப்பது பக்கம் வாசித்துவிடலாம். திரும்பும்போது பெட்டாவுக்குப்போய் பஸ் பிடித்தால் இன்னொரு முப்பது பக்கம். என்னவொன்று, தமிழில் வாசிக்கமுடியாது. ஆர்மி பிடிப்பானோ என்று பயம். ஆங்கிலப்புத்தகம் மாத்திரமே சாத்தியம். எழுதுவது என்றால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும்தான். அன்ரி ஒருவர் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பொன்னியின் செல்வன் வாங்கிவந்தார். ஏற்கனவே வாசிச்ச புத்தகம். இரண்டு நாட்கள் போன் எல்லாம் ஓப் பண்ணிவிட்டு வெறும் பிஸ்கட்டை மட்டும் சாப்பிட்டபடி வாசித்து முடித்தது நினைவிருக்கு. என்னை விடுங்கள். சயந்தன் என்று ஒருத்தன் இருக்கிறான். இரண்டு நாளைக்கு ஒரு புத்தகமாக வாசித்துத் தள்ளிக்கொண்டிருந்தான். சும்மா ஐந்து நிமிடம் இடைவெளி கிடைத்தாலே கின்டில் தூக்குவான்.

அடுத்தது சிங்கப்பூர்:-

கொழும்போடு ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் வேலை நேரம் சிறிது கூட. என்றாலும் போக்குவரத்துகளில் நேரம் வீணாகாது. சனி ஞாயிறு ஒரு புத்தகத்தை தூக்கிக்கொண்டு சைனீஸ் கார்டின் போனால் புல்லுக்குள் படுத்துக்கிடந்து வாசிக்கலாம். வெள்ளியிரவுகளில் அஜீயோடும் கஜனோடும் மணிக்கணக்கில் பேசலாம். எழுதவும் நேரம் கிடைத்தது. தீபனோடு சேர்ந்து ஒரு பாட்டுக்கு லிரிக்ஸ் கூட எழுதினேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை வெளிக்கத்தொடங்கியது. இதுதான் நான் என்று ஒரு ஐடியா வந்தது. தொழில்நுட்ப பதிவுகளிலிருந்து சிறுகதைகளுக்கு தாவினதும் அப்போதுதான். “Girl Is Mine”, “Door Mat” போன்ற கதைகளை எழுதும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. ஆனால் தமிழில் எழுத தயக்கம். டிக்கட் எடுத்து கட்டுநாயக்காவில் கொண்டுபோய் விட்டுவிடுவாங்களோ என்ற பயம். சிங்கப்பூர் வாழ்க்கை ஒருவித சிறை வாழ்க்கை. ட்ரான்சிட் வாழ்க்கை. ஆனால் இயந்திர வாழ்க்கை கிடையாது.

ஆனால் அவுஸ்திரேலியா வாழ்க்கை நம் இயல்புக்கு ஐடியல்!

அவுஸ்திரேலியா விமானம் ஏறுவதாகாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமர்ந்திருந்தபோது எழுதிய வசனம் இது.

“There you go, the final boarding call is made, getting ready to leave with a hope of finding more friends to share more books and relationships in Australia!! May be its a RE-ANNUAL WRITING like Mort’s re-annual winery!!!

அவுஸ்திரேலியா ஏமாற்றவில்லை.

எழுத்தையும் வாசிப்பையும் பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு அவுஸ்திரேலியா ஒரு சொர்க்கம். குளிரைப்பார்க்காமல் ஐந்தரைக்கு எழுந்துவிட்டால், ஒரு டீயும் குடித்துக்கொண்டு இப்படி எழுதலாம்! பின்னர் அலுவலகத்துக்கு ஒரு மணிநேரம் ரயில் பயணம். போக வர இரண்டு மணிநேரம். வாரத்துக்கு ஒரு புத்தகம், சமயத்தில் இரண்டும் வாசிக்கலாம். சனி ஞாயிறு என்றால் ஆயிரத்தெட்டு தமிழ் வளர்க்கும் சம்பவங்கள் இடம்பெறும். ஒவ்வொரு பத்துப்பேரும் தமிழுக்கு சங்கம் அமைத்து மூன்றாவது உப செயலாளர் பதவிக்கு சண்டை பிடிப்பார்கள். குழந்தைகளின் பிறந்தநாட்களுக்கான போத்தில் பார்ட்டிகள். அதே தலைவன் இருக்கிறான் வசனங்கள். இப்படி வார இறுதியை வல்லுறவு செய்ய நிறைய விஷயம் இருக்கும். ஒவ்வொன்றையும் மன்னிப்புக்கேட்டு தவிர்க்க ஆரம்பித்தோமானால் நேரம் மலையாக குவிந்திருக்கும். இந்தநாட்டில் எழுதுவது இலகு. ஒரு சின்ன வட்டத்துக்கான வாழ்க்கை. பிக்கல் பிடுங்கல் இல்லை. முகமன் சங்கடங்கள் இல்லை. குறிப்பா வெள்ளைவான் இல்லை. வியாழக்கிழமை எழுதாவிட்டால் “என்னப்பா நடந்துது?” என்கிறாள் மனைவி. எது செய்ய நினைத்தாலும் நேரம் கிடைக்கிறது. வேறென்ன வேண்டும்?

அப்புறம் நம்மிஷ்டம்.

எந்த வாழ்க்கையும் எந்திர வாழ்க்கை கிடையாது. நாம்தான் வாழ்க்கையை எந்திரமாக்குகிறோம். வெளிநாட்டில டைமே கிடைக்குதில்லை என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். சுத்தப்பொய். அவன் நிறைய டைமை வேஸ்ட் பண்ணுகிறான் என்று அர்த்தம். அல்லது டபிள் ஷிப்ட் அடித்து காசு காசாக உழைக்கிறான் என்று அர்த்தம். மற்றும்படி அடுத்தவன் “ஆடி” வாங்கிட்டான், அம்சமா வீடு கட்டிட்டான் என்று ஆசைப்பட்டாமல், காசு என்ற கஸ்மாலத்திடம் அகப்படாமல், வாழ்க்கையை தனதிஷ்டப்படி வாழ நினைப்பவனுக்கு இந்த வாழ்க்கை சொர்க்கம். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்தால் எந்த வாழ்க்கையும்தான் இயந்திர வாழ்க்கை. இப்போது யோசித்தால் வெளிநாடு வந்து நிறைய உழைத்துவிட்டேன். நிறைய சேமிப்பு சேர்ந்துவிட்டது. நிறைவு. வங்கியில் இல்லை. படலையில் சொல்லுங்கள். இது இயந்திர வாழ்க்கையா?

Jeyakumaran Chandrasegaram

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply