தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமைக்கு பணம் காரணமா?

police

கடந்த 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பணத்திற்காகவே 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக அண்மையில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க கைதுசெய்யப்பட்டார். குறித்த கைது நடவடிக்கையின் பின்னர் ஊடகங்களில் பலவாறான தகவல்கள் வெளியாகிருந்த நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் விளக்கமளித்த போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்குறித்த வியடத்தைத் தெரிவித்தார். குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”கடற்படை தளபதியாக செயற்பட்ட கரண்ணாகொடயின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியவரே லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க. கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கரண்ணாகொடவிடமிருந்து எழுத்துமூலம் முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றது.

குறித்த முறைப்பாட்டில், சம்பத் முனசிங்க தங்கியிருந்த இடத்தில் நான்கு பேரின் அடையாள அட்டைகள், அவர்களில் ஒருவரது கடவுச்சீட்டு, சுமார் 450 வெடிபொருட்கள், தொலைபேசிகள், 10 லட்சம் பெறுமதியான உறுதிப் பத்திரங்கள் இரண்டு என்பன கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, ஏதேனும் தீவிரவாத அமைப்புடன் சம்பத் முனசிங்க தொடர்புபட்டுள்ளாரா என விசாரணை நடத்துமாறு கோரப்பட்டது.

குறித்த விசாரணையில் நான்கு பேரின் விபரங்கள் வெளியாகின. அவர்களுள் மன்னாரைச் சேர்ந்த சூசைப்பிள்ளை அமலன் லியோன், அவரது மகனான சூசைப்பிள்ளை ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிகே எண்டனி மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த தியாகராஜா ஜெகன் ஆகியோரின் அடையாள அட்டைகளே அவை.

அதன் பின்னர் தெஹிவளை பிரதேசத்தில் 5 பேர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் சம்பத் ஹெட்டியாராச்சிக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

ரஜீவ் நாதன் – கொட்டாஞ்சேனை, பிரதீப் விஸ்வநாதன் – கொட்டாஞ்சேனை, திலகேஸ்வர் ராமலிங்கம் – கிராண்ட்பாஸ், மொஹமட் ஜமால்தீன் டிலான் – மருதானை, மொஹமட் சாஜித் – தெமட்டகொட ஆகியோரே கடத்தப்பட்டவர்கள் ஆவர்.

இச் சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தெஹிவளையைச் சேர்ந்த மொஹமட் அலி அன்வர் என்பவர் கட்டுநாயக்கவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையும், ரோஜான் ரீட் என்பவர் கொட்டாஞ்சேனை பகுதியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமையும் தெரியவந்தது.

கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் கடற்படை தரப்பிலிருந்தும் இவற்றிற்கு வலுவான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடத்தப்பட்டவர்கள், கடற்படையின் தொலைபேசிகள் ஊடாக தமது வீட்டாருடன் கதைத்தமை மற்றும் தொலைபேசிக்கு மீள்நிரப்புமாறு கோரியமை என்பன தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் நடத்திய விசாரணையின் தெரியவந்துள்ளன.

அத்தோடு, கடத்தப்பட்ட ஒருவரின் வாகனத்தின் இலக்கத்தை மாற்றி, அதனை கடற்படை வாகனத்தைப் போல பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

அதேபோல் அண்மையில் கைதுசெய்யப்பட்ட டி.கே.பி.தஸநாயக்க இரண்டு குழுக்களை கொண்டு நடத்தியமை தெரியவந்துள்ளது. அதன் ஒரு குழுவிற்கு லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சியும் மற்றைய குழுவிற்கு லெப்டினன்ட் ஜெனரல் ரணசிங்கவும் தலைமை தாங்கியுள்ளனர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தஸநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியமை, அவர் பாவித்த சிம் அட்டைகள் உள்ளிட்ட விடயங்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றைக் கொண்டு குற்றத்தப்பு பிரிவினரால் மேற்காள்ளப்பட்ட விசாரணையில், பணத்திற்காகவே இவர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. அதற்கான வலுவான சாட்சிகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

கடற்படையின் 7 அதிகாரிகள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் ஒருவரான சம்பத் முனசிங்க பிணையில் உள்ளார்.

இவர்கள் மாத்திரமல்ல, 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போன 28 பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர்களின் 11 பேர் தொடர்பான விசாரணையே நிறைவடைந்துள்ளன. ஏனையோர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்” என்றார்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply