தவம் என்னும் இந்துக்களின் கலை

untitled

நம்மில் பலர் தவம் என்றால் முத்திக்காக அனுஸ்டிப்பது என்றும் அது ஒரு சன்னியாசியினால் மேற்கொள்ளப்படுவது என்றுமே புரிந்து வைத்துள்ளோம். தவம் என்பது ஒரு கலை. அதை சாதாரணமானவர்கள் அனுஸ்டிப்பது கூட சிறந்த பழக்கம்.

எனவே தவங்களில் சிறந்த தவம் பற்றி எடுத்து நோக்கலாம்.

தவம் என்றால் ஆன்மீகப் பயிற்சி எனப் பொருள்படும். ஆழ்ந்த தியானம் மற்றும் முறையான ஒழுக்கநெறிகள் ஆகியவை ‘தவம்’ என்று கூறப்படுகின்றன. தவம் என்பதற்கு நடைமுறையில் ‘விரதம்’ அல்லது ‘நோன்பு’ எனவும் பொருள் கொள்ளலாம். தவம் மேற்கொள்பவர் ‘தவஷி’ (ஆண்) அல்லது ‘தவஷ்வினி’ (பெண்) என்றழைக்கப்படுவர்.

பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வது தான் ‘தவம்’ என்று தவறாகக் கருதப்படுகின்றது. ஆயினும் இந்து தர்ம நூல்களில் உடலை வருத்தி செய்யப்படும் தவங்கள் ‘தவிர்க்கப்பட வேண்டியவை’ என அறிவுரை செய்யப்பட்டிருக்கிறது.

பகவத்கீதை உட்பட இதர இந்து தர்ம நூல்கள் தவமுறைகளை மூன்று வகையாகப் பகுத்துக் காட்டுகின்றன.

1. தூய நிலையிலான தவமுறை

2. ஆசை அல்லது தற்பெருமை நிலையிலான தவமுறை

3. அறியாமை மற்றும் மூட நிலையிலான தவமுறை

இவற்றுள் சத்வ தவமுறை தான் ஊக்குவிக்கப்படுகின்றது. சத்வ தவமுறையைக் கடைப்பிடிப்பவர் இறைவனின் அருளைப் பெறுவர். சத்வ தவமுறையை உடல் வாக்கு மனம் என மூன்றாகப் பிரிக்கலாம்.

உடல்

1. தினமும் தவறாமல் தெய்வங்களை வழிபட வேண்டும்.

2. பெற்றோர், குரு மற்றும் சான்றோர்களை மதித்து போற்றவேண்டும்.

3. உடல் தூய்மையைப் பேண வேண்டும்.

4. எளிமையான வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளவேண்டும்.

5. தன்னடத்தையை கடைப்பிடிக்க வேண்டும்.

6. மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்.

வாக்கு

1. பொய்யானவற்றை தவிர்த்து உண்மையைப் பேச வேண்டும்.

2. கடுமையான சொற்களைத் தவிர்த்து இனிமையாக பேச வேண்டும்.

3. மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களை பேச வேண்டும்.

4. நல்லவர்களை நோகடிக்காமல் பேச வேண்டும்.

5. வேதங்கள் கூறும் உண்மைகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.

மனம்

1. இருப்பதைக் கொண்டு மனதில் திருப்தி கொண்டிருக்க வேண்டும்.

2. மனத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும்.

3. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து மனத்தில் மௌனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

4. எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இறைவனின் அருளைப் பெறுவதற்கு இதுபோல எத்தனையோ எளிதான வழிகள் நம் இந்து தர்மத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply