Friday , September 22 2017
விஷேட செய்திகள்
முகப்பு / அயல்தீவுகள் / நயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு

நயினாதீவு ஒரு வராலாற்று நோக்கு

சிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர்.  கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா? இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே.
சப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. . நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது.

n3நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் ஹார்லெம் , சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன. ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர்

எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.

நாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயன என அழைக்கப்பட்டிருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது.

இத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வட கீழ் திசையில் நாகபூசணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டுவித்தாரெனவும் மதுரை வைசியர்களிடமிருந்து பெற்ற ஏடுகள் கூறுகின்றன.

மாநாய்கன் என்னும் வைசியரே நயினார் பட்டரென்ற அந்தணரையும், கண்ணப்பன் என்ற வேளாளரையும் நயினாதீவுக்கு கொண்டு வந்தார். அக்காலத்தில் நாகதீவெனவே வழங்கப்பட்டது. நயினார்பட்டார் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தன் ஞாபகத்தைப் பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார்.

காலப்போக்கில் நயினார்பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரினதும் செல்வாக்கும் விருத்தியடைய ‘நாக’ என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று. இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாகபூசணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன.

நயினார்பட்டரின் 20 ஆம் தலைமுறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூசணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினார்தீவு என்ற சொல்லில் ‘ர்’ விடப்பட்டு நயினாதீவு ஆகியது.

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது.

இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன.

நயினாதீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவிற்கு செல்ல முடியும். நயினாதீவுக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.

நயினாதீவு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் வழிபாட்டுத் தலங்களைத் தன்னகத்தே கொண்டே சர்வ சமரசம் நிலவும் இப்புண்ணிய பூமி எதிர்காலத்தில் சர்வசமயிகளின் யாத்திரைத் தலமாகவும் சமயச் சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும் விளங்குமென்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

nai3 nai4

nai1 nai2

நயினாதீவும் பிற பெயரும்:
1.  பூந்தோட்டம்

பூந்தோட்டமென்பது புராதன பெயராகும். இந்தியாவிற் சிதம்பரத்தைத் தில்லையெனவும் அழைப்பர். அங்கேயுள்ள ஆலயங்களுக்குத் தேவையான பூக்களைப் பெறுவதற்காக நயினாதீவுத் தில்லை வெளியில் ஒரு பெரிய பூந்தோட்டமமைக்கப்பட்டு பூக்கள் சிதம்பரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.

தில்லைக் கோயிலிற்குத் தேவையான பூந்தோட்டமாகையாற் தில்லைப் பூந்தோட்டமென அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தியாவிலே பூக்கள் கிடைத்தமையால் இத்தோட்டம் கைவிடப்பட்டு பூமரங்கள் அழிந்து, பரந்த சமவெளியாகியபடியால் தில்லைவெளியென அழைக்கப்படுகிறது.

இப்பகுதி தற்போது பிடாரி கோயில் இருக்கின்ற பகுதியாகும். தில்லை வெளி என்னும் காணி தோம்பேட்டில் 200 பரப்புடையதாகக் காணப்படுகிறது. சிதம்பரக் கோயிலின் முற்கால ஏடுகளில் இவ்விபரங்கள் காணப்பட்டதாக அறியக் கிடக்கின்றது. தற்போது நுவரெலியாவில் உற்பத்தியாகின்ற பூக்கள் யாழ்ப்பாணம் வரையும் வருவது போல, முற்காலத்தில் இங்கிருந்து பூக்கள் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

2. நாகதீபம்
இச்சொல் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிப்பிடுவதாகக் கூறுவார் சிலர். தீபம் என்ற சொல் தீவு எனும் பொருளுமுடையது. யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தீவு அல்ல. அது நான்கு பக்கமும் கடலாற் சூழப்படவில்லை. ஆகவே, நாகதீவே நாக தீபமாகும். நாகதீப – இச்சொல் சிங்களச் சொல்லாக இருக்கலாம். யாழ்ப்பாணம் ‘யாப்பனய’ என்பது போல நாகதீபம் ‘நாகதீப’ என அழைக்கப்பட்டுள்ளது.

3. நாவலந்தீவு, சம்புத்தீவு, நரித்தீவு
சம்பு என்ற சொல், சிவன், நாவல், நாவலந்தீவு, நரி என்பவற்றைக் குறிக்கும். நாவலந்தீவு என்ற சொல்லுக்கு  தமிழ் லெக்ஸிகன் அகராதியில் 2229 ஆம் பக்கத்தில் ஏழு தீவுகளில் உப்புக் கடல் சூழ்ந்த தீவு எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. சம்பு என்ற சொல் நரியையும் குறிப்பதனால் சிலர் நரித்தீவு எனச் சம்புத்தீவு என்ற பெயருக்கு மாறான கருத்துக் கொண்டிருக்கலாம்.

4. மணிபல்லவம்
கலைக்களஞ்சியம் தொகுதி 08 இல் ‘மணி’ என்ற சொல் நாகரத்தினத்தையே குறிக்கின்றது. நாகரத்தினத்தை வாங்க வந்த வைசியர்களினால் இப்பெயர்கள் அழைக்கப்பட்டதாக மதுரை வைசியர்களது பழைய ஏடுகள் கூறுகின்றன.

5. பிராமணத்தீவு
கி.பி 1658 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்ட நயினாதீவு குடிசன மதிப்பு பின்வருமாறு:
பிரிவு                                                                     தொகை
பார்ப்பார் – புரோகித வேலை செய்வோர்              02
பார்ப்பார் – புரோகிதர் அல்லாதவர்                         65
வேளாளர்                                                                  40
பரதவர்                                                                       15
கொல்லர் ரூ தச்சர்                                                  03
அம்பட்டர்                                                                 03
வண்ணார்                                                                 02
தோப்பேறிய நளவர்                                                 13
பறையர்                                                                    07
மொத்த தொகை                                                  150

ஆகவே, பிராமணக்குடிகள் 67, குடிமக்களில் பெரும்பான்மையோரின் பெயராற் பிராமணத்தீவு என அழைக்கப்பட்டது.

6. நாகேஸ்வரம்
முற்காலத்தில் நயினாதீவில் இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒரே ஆலயத்தில் வேற வேறாக இருந்தன. அப்பனும் அம்மையும் கோயில் கொண்டருளி இருந்த ஆலயமே நாகேஸ்வரமென அழைக்கப்பட்டது. அவ்வாலயப் பேரே ஊர்ப் பெயராக வழங்கி வந்திருக்கின்றது.

நயினாதீவு தோற்றமும் இலக்கிய நோக்கும்;
நயினாதீவிற் சிறந்த துறைமுகங்களும், யாத்திரைத் தலங்களும் இருந்தமையால் பல வெளிநாட்டு வணிகர்களும், பல வெளிநாட்டு யாத்திரிகர்களும் காலத்துக்குக் காலம் இத்தீவைத் தரிசித்தனர்.

புத்தர் பெருமான் கி.மு 523 இற்கும் கி;.மு 483 இற்குமிடையில் தமது யாத்திரை காரணமாக நாகதீவைத் தரிசித்து நாக வழிபாடியற்றியிருக்க வேண்டும். அவர் வந்தபோது ஏற்பட்ட அரச சபைப் பிணக்கையும் தீர்த்து வைத்துள்ளார். சாவக நாட்டு மன்னன் புத்தரது பாதபீடிகையைத் தரிசிக்க மரக்கலமேறி வந்தனனென மணிமேகலை கூறும், பர்மாவில் இருந்து தர்மசோக மகாராசா புத்திர சோகத்தால் வருந்தி நாக வழிபாடியற்றிப் புத்திரப்பேறடைய நாகதீவு வந்தாரென அறியக்கிடக்கின்றது.

பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனன் நாகவழிபாடியற்ற மணிபுரத்துக்கு வந்த நாககன்னிகையை மணஞ்செய்து பப்பிரவாகன் என்னும் புத்திரனைப் பெற்றானெனவும், பப்பிரவாகனது பெயரே பப்பிரவாகனன் சல்லியென ஶ்ரீ நாகபூசணி ஆலயம் அமைந்த விடயமென அறியக்கிடக்கின்றது. ஆபுத்திரன் வந்த அட்சய பாத்திரமெனும் அமுதசுரபியைக் கோமுகிப் பொய்கையிலிட்டுச் சென்றான்.

நெடுமுடிக்கிள்ளி எனும் சோழவரசன் யாத்திரை காரணமாக மணிபல்லவத்துக்கு வந்து  பீலிவளை என்பாளை மணந்து அதன் பேறாகத் தொண்டைமான் இளந்திரையனைப் பெற்றானென யாழ்ப்பாணச் சரித்திர நூல் கூறும்.

நயினாதீவில் கிரேக்க, உரோம, இந்திய, சீனப் பழைய நாணயங்கள் காலத்துக்குக் காலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிற் கி.பி 12 ஆம் நூற்றாண்டிற் செய்யப்பட்ட சாடிகள் நயினாதீவு கிணறு ஒன்றிற் கண்டுபிடிக்கப்பட்டன. மகாபராக்கிரமபாகுவின் சில சாசனப்படி அநேக வெளிநாட்டுப் பிரயாணக் கப்பல்களும், வணிகக் கப்பல்களும் நயினாதீவு துறைமுகங்களுக்கு வந்துள்ளன.

போர்த்துக்கேயர் காலம்
போர்த்துக்கேயர் வருகை நயினாதீவுக்குப் பெரும் நட்டத்தையே விளைவித்திருக்கின்றது. நாகபூசணியம்மன் கோயில் முற்றாக அழிக்கப்பட்டது. பொருள்கள் சூறையாடப்பட்டன. இக்காலம் கி.பி 1620 இற்கும் கி.பி 1624 இற்கும் பறங்கியரால் காணித் தோம்பேடுகள் எழுதப்பட்டதாகக் கருத இடமுண்டு. ஆனால், கி.பி 1645 இல் தொம் பிலிப்ஸ்கறிஞ்ஞா அவர்களால் திருத்தமான தோம்பேடுகள் எழுதப்பட்டன.

அக்காலத்தில் நயினாதீவில் நிரந்தரக் குடிபதிகளாகவிருந்தவர்களுக்குத் தான் நயினாதீவுத் தோம்பேடுகளில் காணிகள் காணப்படுகின்றன. போர்த்துக்கேயரது சமயம் இங்கே பரவவில்லை. ஆனால், இவர்கள் தங்கள் பெயர்களிற் சிலவற்றைப் பட்டமாகச் சிலருக்குக் கொடுத்துள்ளனர்.  நயினாதீவு 32 கோயிற் பற்றில் ஒன்றாக்கப்பட்டது.

ஒல்லாந்தர் காலம்
ஒல்லாந்தர் காலத்தில் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தற் தொழில் மிக விசேடம் பெற்றுள்ளது. அவர்கள் காலத்தில் நயினாதீவு கோவிற் பற்று நொத்தாராகவும், கிராம வரி அறவிடுபவராகவும் இராமச்சந்திரர் கதிரித்தம்பி நியமிக்கப்பட்டார். போர்த்துக்கேயர் அழித்த கோயில் திரும்பச் சிறிதாகக் கட்டப்பட்டிருந்தது. அதையே ஒல்லாந்தர் அழிக்க முற்பட்டனர். கட்டிய காலம் கி.பி 1788. கட்டுவித்தவர் இராமலிங்கர் இராமச்சந்திரர்.

இவர் காலத்தில் கி.பி 1792 இல் ஒல்லாந்தர் நாகபூசணியம்மன் தேவாலயத்தை அழித்துச் சூறையாட வந்தனரெனவும், அவர் தான் ஒல்லாந்த இறப்பிறமாது சமயத்துக்கு உதவி செய்வதாகவும் கூறி கிராம வரியையும் அறவிட்டுக் கொடுத்தார். ஒல்லாந்தர் தமது பட்டத்தை இவருக்கு வழங்கிப் பிறான்சீக் கதிரித்தம்பி என அழைத்தனர். இவரது கையொப்பங்கள் எல்லாம் யாழ்ப்பாணக் காணிக் கந்தோரில் பிறான்சீக் கதிரித்தம்பி எனவே அமைந்துள்ளன.

இறப்பிறமாது சமயமே புரட்டஸ்தாந்து மதமாகும். ஒல்லாந்தர் காலத்திற் தான் நயினாதீவில் புரட்டஸ்தாந்து மதத்துக்குரிய ஒரு இடம் நயினாதீவு 5 ஆம் வட்டாரத்தில் இருக்கிறது. ஆயினும், தற்போது அச்சமயத்தைப் பின்பற்றுவபரெவருமில்லை. இவர்கள் காலத்திற் தான் தூத்துக்குடி முஸ்லிம்கள் நயினாதீவில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். தென்னந் தோட்டங்களை அமைத்தனர். பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர் எனத் துணிந்து கூறலாம்.

ஆங்கிலேயர் காலம்
2-3-1815 இல் தான் இலங்கை முழுவதும் ஆங்கிலேயரின் ஆளுமையின் கீழ் வந்தது. நயினாதீவு வடமாகாணத்தில் யாழ்ப்பாணப் பெரும்பிரிவில் தீவுப் பகுதி மணியகாரரின் நிர்வாகத்தின் கீழ் ஒரு பகுதியாக அமைந்தது. பரிபாலனத்துக்காக உடையாரும் விதானையாரும் நியமிக்கப்பட்டனர். பிற்காலத்தில் மணியகாரன் முறை மாற்றமடைந்து தீவுப்பகுதிக் காரியாதிகாரியின் கீழ் நிர்வாகம் மாறியது.

விதானையென்ற ஒரு தலைமையின் கீழ் பொதுமக்களது விவகாரங்களும் அமைந்தன. கிராமச் சங்க முறை உருவாகியது. மக்களாற் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கிராமச் சீர்திருத்தங்களில் ஈடுபட்டனர்.

சுதந்திர காலம்
4-2-1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தவுடன் நயினாதீவு தீவிரமாக முன்னேற்றமடைந்தது. ஸ்ரீ நாகபூசணி அம்மன் தேவாலயமும், ஶ்ரீநாக விகாரையும் மிகவும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. தற்போதைய காலத்தில் நிகழ்ந்த சரித்திரப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சிகள் ஶ்ரீநாகபூசணியம்மனின்  திருத்தேர் அமைப்பும், நயினாதீவு யாத்திரிகர் அன்னதான சபையாரின் அமுதசுரபி மணிமண்டபமுமாம்.

இன்று வரை நயினாதீவு தனது கடந்த காலச் சரித்திரத்தை நினைவூட்டித் தனது எதிர்காலச் சரித்திரத்தை மிகச் செழிப்புடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கிறது.

 

கிராம வரைபடம்:-

n1

தொகுப்பு – அனலையூரான்
தகவல் மூலம் – www.nainativu.com

 

பதிவாளர் பற்றி

S. Shutharsan - Web Developer & Editor - shuthan@gmail.com

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top