பல் சொத்தை படு அவஸ்தை… பற்களைப் பராமரிக்க உதவும் ஒரு சிறப்பு கட்டுரை

சொத்தை பல் என்றால் என்ன? 

நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உதவுகின்றன. கடினமான பல்லில் பாதிப்பு ஏற்பட்டு பல்லின் உறுதியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கிறோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறைபாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிக அளவில் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் பாதிப்பு வேர் வரை இறங்கி, மற்ற பற்களையும் பாதித்துவிடும்.
 
பல் சொத்தை வரக் காரணங்கள்:

பாக்டீரியாவும், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதுமே பல் சொத்தை ஏற்பட முக்கியக் காரணங்கள்.

மரபு வழியாகவும், உமிழ்நீர் அடர்த்தியாக இருந்தாலும் பல் சொத்தை வர வாய்ப்பு அதிகம்.

கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகாலத்தில் பல்லில் நோய்த் தொற்று இருந்து, அது தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு வரலாம்.

குழந்தைகள் இரவில், ஃபீடிங் பாட்டிலில் பால் குடித்தபடியே தூங்குவதன் மூலம், பற்களில் பால் தங்கி, சொத்தையை ஏற்படுத்திவிடும்.

சரியாக பல் துலக்காததாலும் சொத்தை வரலாம்.

உணவுப் பழக்கங்கள்… ஜங்க் ஃபுட்ஸ், சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும், ஒட்டும் தன்மையுள்ள பசை உணவாகவே இருக்கிறது. பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் அது பற்களின் இடையே மாட்டிக்கொள்ளுமே தவிர, ஒட்டாது. அதையே சமைத்துச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டுகிறது. இந்த உணவுத் துகள்கள் அதிகம் சேர்ந்து பற்களைப் பாதிக்கின்றன.

அறிகுறிகள்:

கருப்பான கோடு போல் இருக்கும்.

தொட்டால் அந்த இடம் மிருதுவாக இருக்கும்.  சிலருக்கு ‘படக்’ என்று உள்ளே போகும் அளவுக்கு குழியும் வந்திருக்கலாம்.

பல் குழியாகி ஆழமாகப்போவதைப் பொருத்து பாதிப்புகள் தெரியவரும்.

காய்ச்சல், தொண்டையில் வலி, காது, தலை, கழுத்து போன்ற இடங்களில் வலி இருக்கும்.

பல் சொத்தைக்கு எந்த மாதிரியான சிகிச்சைகள் இருக்கின்றன…

பற்குழி வேர் வரை அரித்து வலியை ஏற்படுத்தும்போதுதான் கிராம்பு வைப்பது போன்ற கை வைத்தியங்களைக் கடைப்பிடிக்கிறோம். இதை அப்படியே கவனிக்காமல்விட்டால், வேர் வரை பாதிப்பை ஏற்படுத்தி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

எக்ஸ்-ரே மூலம் பல் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து, மேல் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தால், ஆன்டிசெப்டிக் லேயர் கொடுத்து அதுக்கு மேல் ஃபில்லிங் செய்யப்படும்.

வீக்கம், சீழ் இருந்து, வேர் வரை போய் இருந்தால் ‘ரூட் கெனால்’ மூலம் பல்லின் வேர்ப் பகுதி சுத்தம் செய்யப்படும். பல்லின் வேர்ப் பகுதி இல்லாததால் அந்த பல்லுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஒரு கட்டத்தில் பல் பொடிப்பொடியாக உடைந்துவிடவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க அந்தப் பல்லின் மேல் பகுதியில மெட்டல் கேப் போட்டுவிடலாம். இதனால் பல்லின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும்.

பல் பிடுங்கினால் பிரச்னையா?

சிலர் சொத்தை வந்தால் பிடுங்கிவிடுகின்றனர். சரி எடுத்துவிட்டோமே, என்று மாற்றுப் பல் கட்டுவதுமில்லை. இதனால் பக்கத்தில் உள்ள பற்களும் பாதிப்புக்கு உள்ளாகும். பல் எடுத்த இடத்தில் இடைவெளி ஏற்பட்டு முக அழகைக் கெடுத்துவிடும். வார்த்தைகள் குளறும். நாக்கை அடிக்கடி கடிக்க நேரிடும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply