பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றம்

Wigneswaran-4“மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது ஜனநாயக உரிமை”புங்குடுதீவு மாணவி வித்யாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது

மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். நான் கூட என் எண்ணங்களை அறிக்கையாக ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். ஆனால் அமைதியாக நடைபெறும் எமது பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையுஞ் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றச் செயல்கள் ஆவன. இன்றைய இந்தச் சோகச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி யார் யார் இந்த ஈனச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பதை மக்கள் விழிப்பாய் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

பல காரணங்களின் நிமித்தம் அன்றும் இன்றும் பொலிசாருடன் ஒத்துழைப்பது எமது மக்களுக்கு சற்றுச் சிரமமாகவே இருக்கின்றது. வித்தியாவின் வருகை தாமதம் அடைவது பற்றி பொலிசாரிடம் தாய் தந்தையர் கூறியதும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய இந்தத் துர்ப்பாக்கிய நிலை எழுந்திராது. அதன் பின்னரும் குற்றவாளிகளை கைது செய்வது சம்பந்தமாகத் தாமதத்தையும் அசட்டைத் தன்மையையுங் காட்டுகின்றார்களோ பொலிசார் என்பதிலும் எமது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள்.
ஆனால் இத்தருணத்தில் நாங்கள் பொலிசாருக்கு அனுசரணையாகச் செயல்ப்பட வேண்டுமே ஒளிய அவர்களை எதிரிகள் போன்று கணித்து நடந்து கொள்ளக் கூடாது.
பொலிசாருக்கும் எமக்கும் இடையில் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி நிலைமையைச் சீர்குலைக்க சில விஷமிகள் கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்பது நன்றாகப் புரிகின்றது. அவர்களின் சாகசங்களுக்கு நாங்கள் அடிமையாகப்படாது. சட்டமும் ஒழுங்கும் ஏற்படுத்தப்பட நாங்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமே ஒளிய உபத்திரவமாய் இருக்கக் கூடாது. இன்று அமைச்சர்கள் அனைவரும் அவசரமாகக் கூடி நிலைமையை ஆராயவிருக்கின்றோம். இது பற்றி சிரேஷ்ட பொலிஸ் உப அதிபருடன் தொடர்பு கொண்டுள்ளோம். பொலிசாருடன் எமது மாகாண சபை உறுப்பினர்களையுஞ் சேர்த்து விழிப்புக் குழுக்களில் இரு தரப்பாரையும் சம்பந்தப்படுத்தி பங்கேற்க வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மீண்டும் ஒரு அறிக்கையை நாம் வெளியிடுவோம்.
அதே நேரம் நடைபெறும் கண்டனப் பேரணிகள் மக்களால் நடாத்தப்படுபவையே ஒளிய எந்த ஒரு கட்சியினாலோ, தொழிற்சங்கத்தினாலோ, நிறுவனத்தினாலோ அல்ல என்பதை நாங்கள் நினைவுறுத்த வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட சில அலகுகள், நிறுவனங்கள் போன்றவை தமக்கு இதனூடாகச் சில தனித்துவமான நன்மைகளைப் பெற முயற்சித்தால் அது இறந்த அந்த அபலைப் பெண்ணுக்கு நாம் செய்யுந் துரோகமாகவே கணிக்கப்படும். ஆகவே சந்தர்ப்பத்தைப் பாவித்து கட்சி நலம், காடையர் நலம், கரவான நலங் காண விழைபவர்களுக்கு நாங்கள் எச்சரிக்கின்றோம். மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான விளைவுகளை நீங்கள் எதிர்நோக்க நேரிடும்.
மக்கள் தமது கண்டனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் அமைதியுடன் இன்று தெரியப்படுத்தி விட்டு நாளைய தினம் எமது நிலைமை வழமைக்குத் திரும்ப உதவ வேண்டும். மக்கள் அமைதிகாக்க வேண்டும். இல்லையேல் எம்மை இராணுவத்தால்த்தான் கட்டுப்படுத்த முடியும் பொலிசாரால் கூட முடியாது என்று அரசியல் ரீதியாகப் பேசப்படும். இதற்கு எம்மக்கள் இடமளிக்கக் கூடாது.
மிகவும் நிதானத்துடன் எம்மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். கடத்தலிலும் வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபட்ட அனைவருஞ் சட்டத்தின் முன் கொண்டு செல்லப்படுவர் என்று நாங்கள் உறுதி அளிக்கின்றோம். அச் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் கூறிவைக்கின்றோம்.
நன்றி.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply