மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 10 மீனவர்கள் மற்றும் அங்கு பிடித்து வைக்கப்பட்டுள்ள 129 படகுகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து மீன்பிடிக்கச்சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் 21ம் திகதி (நேற்று) கைது செய்து இலங்கை காங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

கடந்த 6ம் திகதி நடந்த துப்பாக்கி சூட்டில் பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டும், மற்றொருவர் காயமடைந்தும் உள்ள குறுகிய காலத்தில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடந்து முடிந்த நிலையில் 85 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்தனர்.

தற்போது தமிழக மீனவர்களை அவர்கள் கைது செய்துள்ளனர். இது, இந்த பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக இரண்டு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ராஜ்ய ரீதியான நடவடிக்கைகளை அவமதிப்பதுபோல் காணப்படுகிறது.

தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை தகர்ப்பதற்காகவே, பாக்.நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்கிறது.

கடலில் மீன்பிடிக்கும் பிரச்சினையில் இரு நாடுகள் தரப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவது தொடர்பான உலக அளவிலான எத்தனையோ உதாரணங்களை நாங்கள் ஏற்கனவே காட்டியிருக்கிறோம். இந்த கைது விவகாரத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறேன்.

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை மீட்க வேண்டியது தற்போதைய தேவையாக உள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை செல்லாது என்று அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்து கொண்டுள்ளது. மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினையின் தீர்வுக்காக அவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்துக்காக ரூ.1,650 கோடியை அனுமதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பிடிபட்ட படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் செயல்பாடு, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தமிழக மீனவர்கள் இடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக கவனிக்கப்படாமல் கிடப்பில் இருக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 தமிழக மீனவர்களையும், 129 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிப்பதற்கு ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளியுறவுத்துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply