முள்ளிவாய்க்கால்: ஈழத் தமிழர்களை கருவறுத்த நாள் இன்று

CE62QL4WMAEZEya

 தமிழினத்தின் மீது கடந்த அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையில் துயரத்தை நினைவுகூரும் துயர்மிக்க நாள் இன்றாகும்.

சுமார் மூன்று தசாப்தகாலமாக முன்னெடுக்கப்பட்ட ஒரு சரித்திரப் போராட்டத்திற்கு, முள்ளிவாய்க்காலில் சமாதிகட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள், மனிதகுலத்திற்கு விரோதமானவை என்பதை யாவரும் அறிவர். இத் துயரத் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஆண்டுகள் எட்டாகின்ற போதும், அம் மக்களின் வலிகளுக்கு மருந்தோ, துயரத்திற்கு ஆறுதலோ, அநியாயத்திற்கான நீதியோ கிடைக்கவில்லை.

ஒரே நாட்டில் வாழ்ந்த மக்களை கொன்றொழித்து அவர்களது சமாதியின் மீதேறி, ‘யுத்த வெற்றி’ என கொண்டாட்டம் நடத்தியது கடந்த அரசாங்கம். மே 18இல், உயிரிழந்த உறவுகளை நினைத்து எம் மக்கள் ஒப்பாரி வைக்க, மறுபுறத்தில் யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. அதுமட்டுமா? இறந்த தமது உறவினர்களை நினைத்து அன்றைய தினம் நினைவஞ்சலி செலுத்துவதற்கும் கடந்த அரசாங்கம் தடைவிதித்து, மனித உணர்வுகளுக்கு கட்டுப்போட்டு, அதில் குதூகலித்தது. சட்டத்தைக்கூட தம் பக்கம் வளைத்துப்போட்டு, நீதிமன்றத்தின் ஊடாக நினைவேந்தல்களுக்கு தடைபோட்டது.

எனினும், நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், இத்தனை வருடங்களாய் உள்ளத்தில் போட்டு அங்கலாய்த்துக்கொண்டிருந்த உணர்வுகளை கொட்டித்தீர்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கடந்த 2015ஆம் ஆண்டு யுத்த வெற்றி என்பதை தவிர்த்து, யுத்த நிறைவு நினைவுநாள் என மே 18 நினைவுகூரப்பட்டு, மக்களுக்கும் நினைவேந்தல்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அதேபோன்று கடந்த வருடம் இராணுவ அணிவகுப்பு இன்றி நல்லிணக்கத்திற்கு சார்பான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் சற்று ஆறுதலடைந்த மக்களுக்கு இந்த வருடம் அது நிச்சயமற்ற தன்மையையே ஏற்படுத்தியுள்ளது. இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் பல நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தென்னிலங்கையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. அரசாங்க தரப்பினரே இதனை ஏற்றுக்கொள்ள முடியாதென விமர்சித்திருப்பதானது, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது வைத்திருந்த சிறு நம்பிக்கையையும் தகர்த்தெறிந்துள்ளது.

அதற்கும் மேலாக, தமிழின அழிப்பை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் சிலைகளையும் கல்வெட்டுக்களையும் வடிவமைத்த அருட்தந்தை ஒருவரை விசாரித்து எச்சரித்த பொலிஸார், அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை தடுக்கும் வகையில் இரவோடிரவாக நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றுவிட்டனர்.

இச் செயற்பாடுகள் உறவுகளை இழந்த மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அமைந்துள்ளதோடு, உணர்வுகளை மழுங்கடிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த கால கறைபடிந்த வரலாற்றில் இருந்து மீண்டு, ஏனைய சமூகங்களுக்கு நிகராக சகல உரிமைகளையும் பெற்று வாழ எத்தனிக்கும் தருணத்தில், படிப்படியாக தமிழ் மக்கள் மீதான வன்முறைகளும் கெடுபிடிகளும் அதிகரித்துச் செல்வதை அன்றாட செயற்பாடுகள் பறைசாற்றி நிற்கின்றன.

இழப்பதற்கு எதுவுமின்றி உயிரை மட்டும் தாங்கி வந்த மக்கள், கடந்த அரசாங்கத்தின் வழிகாட்டலில் படையினரிடம் வேறு வழியின்றி சரணடைந்தனர். அவர்களை இன்றுவரை தேடியலைந்து, இறுதியில் செய்வதறியாது மாதங்களை கடந்து இன்று வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அத்தோடு, படையினர் வசமுள்ள காணிகளில் பல இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதோடு, மீள்குடியேற்றமும் பூரணமாக பூர்த்தியாகாமல் உள்ளது. வடக்கில் ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டுள்ள போதிலும், குற்றச் செயல்கள் முன்னொருபோது இல்லாத நிலையில் தலைதூக்கியுள்ளன.

யுத்தக் குற்றச் செயற்பாடுகளுக்கு சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கோம் என்ற தீர்மானத்தில் அரசாங்கம் விடாப்படியாக உள்ள நிலையில், அரசாங்கம் குறிப்பிட்ட நிலைமாறுகால நீதியென்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள் இன்று செய்வதறியாது தவிக்கின்றனர். எனினும், ஏதோ ஒரு வகையில் தமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்று தமிழின அழிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே இம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply