Wednesday , April 26 2017
விஷேட செய்திகள்
முகப்பு / செய்திகள் / இலங்கைச் செய்திகள் / யாழ் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் கழிவு ஒயில் பிரச்சினை

யாழ் மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் கழிவு ஒயில் பிரச்சினை

மகிந்த தோற்றார், மைத்திரி வென்றார். அரசியல் மாற்றம் தமிழர்களுக்கு விடிவு, பசில் தலைமறைவு, டக்லஸ் தேவாநந்தாவுக்கு ஆப்பு, கோத்தா வெளியில் வந்தார் என்று கதை பரவி வரும் இவ்வேலையில் எம் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவனிப்பார் எவருமில்லை. சுன்னாகம் பகுதியில் உள்ள கிணறுகளில் பரவி வரும் கழிவு ஒயில் கலப்பு தற்போது கட்டுவன், தெல்லிப்பழை பகுதியில் உள்ள கிணறுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. எற்கனவே கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சுன்னாகம் கடந்து மல்லாகம் நீதிமன்ற சுற்றாடல் வரை பரவிய நிலையில் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரியினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரனைகள் நடை பெற்று வரும் இந்நிலையில் தற்போது புதிதாக கட்டுவன் தெல்லிப்பழை பகுதியில் உள்ள கிணறுகளிலும் கழிவு ஒயில் கலக்கின்றமை பாரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு அல்லாடும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த கழிவு ஒயில் கிணறுகளில் கலப்பதினால் பாரிய ஆபத்துக்களை இம்மக்கள் அனுபவிக்க நேரிடுகிறது. குறிப்பாக நுரையீரல், இரத்தப் புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, வலிப்பு போன்ற பல குணப்படுத்த முடியாத நோய்கள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் மக்களுக்கு பிறக்கப் போகும் பிள்ளைகளும் இவ்வாபத்தை அனுபவிக்க நேரிடும் என்று வைத்தியர்கள் அறிவித்துள்ள போதிலும் கூட உடனடியான நடவடிக்கைகள் எதுவும் ஏற்படவில்லை. கிணறுகளில கழிவு ஒயில் கலப்பதினால் பொது மக்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களுடைய விவசாய நடவஎடிக்கைகளும் ஏனைய செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு செல்லும் நிலமை காணப்படுகின்றது.

மயிலிட்டி, ஏழாலை தெற்கு, மேற்குப் பகுதியில் உள்ள வீடுகளின் கிணற்றுநீரிலும் ஒயில் கலந்துள்ளதால் பிரதேசசபைகள் ஆங்காங்கே தாங்கிகளை நிறுவி நீரை வழங்கி வருகின்றது. இது நுகர்வுக்கு போதுமான வகையில் அமையவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கும் சென்று பெற்றுவரும் நிலையில் உள்ளனர். கிணற்று நீருக்கு பெயர் போன ஏழாலை மக்களே தமது அத்தியாவசிய தேவையான குடி நீருக்காக வேறு இடங்களுக்கு அலைந்து திரிய வேண்டிய துர்ப் பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் கிணற்று நீரில் ஒயில் கலந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் தாம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை காணப்படுவதுடன் சுத்தமான மரக்கறிகளை பெற முடியாத நிலையும் காலப்போக்கில் ஏற்படலாம்

2009ம் ஆண்டு முதல் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையத்தில் நொதேன் பவர் கம்பனி (பிறைவற்) லிமிட்டட் என்ற டீசலில் இயங்கும் தனியார் நிறுவனம் தன் மின் பிறப்பாக்கிகளை பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த மின் பிறப்பாக்கிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு ஒயில்கள் பாதுகாப்பற்ற முறையில் வெறுமனவே நிலத்தில் கிடங்கு வெட்டி அதற்குள் விடப்படுகிறது. இதன் காரணமாக அந்த பிரதேசத்தை சூழ உள்ள கிணறுகளில் எண்ணை கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றது.

2012ம் ஆண்டு இவ்வாறான இரண்டு கிணறுகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. ஆனால் இன்று ஐந்து கிலோமீற்றர் சுற்றளவில் உள்ள கிணறுகளுக்கு கழிவு எண்ணெய் படிமங்களின் கசிவால் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2013 முதல் பாராளுமன்றச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட உதுறு ஜெனனி என்ற நிறுவனமும் மேற்கூறியது போல இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. தற்போது யாழ்குடா நாட்டிற்கான மின்சார விநியோகம் நீர் மின்சாரத்தில் இயங்கும் தேசிய மின்வலையமைப்பிலிருந்தே வழங்கப்படுகின்றது. மேற்கூறிய இரு நிறுவனங்களினாலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் அழுத்த சீராக்கலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

நொதேன் பவர் கம்பனி (பிறைவற்) லிமிட்டட் நிறுவனமும், உதுறு ஜெனனி நிறுவனமும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுற்றாடல் அதிகாரசபை சட்டத்திற்கேற்ப சுற்றாடல் பாதிப்பு தொடர்பான மதிப்பீடுகள் எவற்றையும் செய்யாததோடு பிரதேசசபைகள் சட்டத்திற்கேற்ப வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் அனுமதியினையும் பெறவில்லை.

இப் பிரதேச மக்கள் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு இருக்கின்ற கிணறுகளின் எண்ணெய் படிமங்களை அறிந்து சுன்னாகப் பிரதேசத்தில் எண்ணெய்வளம் இருப்பதாக நம்பினர். அதன் பின்னர் 2014ம் ஆண்டு ஆடி மாதமளவில் இப்பகுதி விவசாயிகள் தமது கிணற்று நீரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மூலம் பரிசோதனை செய்து பார்த்தபோது அப்பகுதி மக்களினதும் சுகாதாரத்தை உடல் நலத்தையும் பாதிக்க கூடிய வகையிலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத வகையிலும் கிணறுகளில் எண்ணை படிமங்கள் கலந்திருப்பதைக் கண்டனர். இதனைத் தொடர்ந்து குறித்த தனியார் மின்உற்பத்தி நிறுவனத்தை தடை செய்யக்கோரி 2014 நவம்பர் 11ம் திகதி பதினொரு விவசாயிகள் குறித்த நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலை மேற் கொண்டனர். இதுவரை காலமும் இந்த வழக்கிற்கு எந்த தீர்வும் இல்லாமல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டே செல்கின்றது.

வடமாகாண சபையின் செயற்பாடு

கழிவு எண்ணை நாளுக்கு நாள் இப்பகுதி நிலத்தடி நீரினை ஆக்கிரமித்து வருகிறது. ஆனால் வடமாகாண சபையின் செயற்பாடுகளானது வெறுமனவே அறிக்கை வடிவுகளிலும் ஆய்வு செய்வதாகவுமே இருக்கின்றன. மாகாணசபையில் இருக்கின்ற அமைச்சர்கள், உறுப்பினர்களின் வாதப்பிரதி வாதங்களும், அறிக்கைகளும் குறித்த அனர்த்தத்தை தடுப்பதாக அமையவில்லை. சுன்னாகத்தில் ஆரம்பித்த எண்ணைப்பரவல் சூராவத்தைஇ ஏழாலை ஊடாக தற்போது கட்டுவன் ,தெல்லிப்பழை வரை பரவியுள்ளது. இந் நிலையில் குறித்த தனியார் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, சுகாதாரத் திணைக்களங்களின் அறிக்கைகள் குறித்த நிறுவனத்தை உடனடியாகத் தடைசெய்யாமல் நஸ்டஈட்டினைக் கோருவதாக இருப்பது மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தீர்வு யோசனை

தற்போது இங்கு பரவிவரும் அனர்த்தத்திற்கு உரிய தீர்வு குறித்த நிறுவனங்களை உடனடியாக மூடுவதே! குடாநாட்டின் மின்சாரத்தேவைக்கு தேசிய வலையமைப்பிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம். அதுபோதாவிட்டால் சூரியமின்சாரம்,காற்று மினசாரம், உயிரியல் மின்சாரம் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யலாம்.

யாழ்குடாநாட்டில் வளமான நிலங்களும், நன்னீர்ப்பிரதேசங்களும் மிகவும் குறைவு. சுன்னாகம் பிரதேசம் அமைந்துள்ளன வலி.வடக்குப்பிரதேசம் இவ்வளங்களையுடையது. இதன் ஒரு பகுதியை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவம் ஆக்கரமித்து நிற்கின்றது. மீதிப்பகுதிக்கு தற்போது நஞ்சூட்டப்படுகின்றது.சுன்னாகத்திலிருந்துதான் முன்னர் காரை நகர் பிரதேசத்திற்கு குடிநீர் அனுப்பப்பட்டது.மற்றவர்களுக்கு நீரை வழங்கிய மக்கள் தற்போது தமக்கு நீரில்லாமல் தவிக்கின்றனர்.

இந்த எண்ணைய் படிவ விவகாரம் பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியா? என சந்தேகிக்கத் தோன்றுகின்றது. தமது இருப்பை இழக்கும் மக்கள் இவ் பிரதேசங்களிலிருந்து இடம்பெயருவர் என பேரினவாத சக்திகள் நினைக்கலாம். இது உண்மையானால் தமிழ்த் தேசிய ஆதாரத்தூண்களில் ஒன்றான பொருளாதாரத்தை சிதைக்கும் நகர்வுகளில் ஒரு பரிணாம வளர்ச்சியை பேரின வாதசக்திகள் பெற்றிருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.

ஆபத்து தலைக்குமேல் வந்து விட்டது இனிமேலும் நாம் அக்கறையற்றிருந்தால் எல்லோரும் சேர்ந்து அழிய வேண்டியதுதான் என்பதைக் கருத்தில் கொண்டு சுன்னாகம் மேற்கு பகுதியில் உள்ள கிணறுகளில் தற்போது பரவும் கழிவு ஓயில் சம்பந்தமான கலந்துரையாடல் சுன்னாகம் சிவன்கோவில் மண்டபத்தில் நேற்று (13.01.2015) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவு ஓயில் குறித்து மக்கள் விசனம் தெரிவித்தபோது அதிகாரிகள்இ அரசியல்வாதிகளின் துணையுடன் இந்த பிரச்சினையை வெளிவராது தடுத்தனர். இதன் காரணமாகவே இன்று பொதுமக்கள் குடிதண்ணீருக்கு அலைய வேண்டியுள்ளதாக அங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உட்படசுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு தமது நிலைமையை எடுத்துரைத்தனர். கடந்த காலத்தில் இந்தப் பிரச்சினை எழுந்த போதிலும், சுகாதார அதிகாரிகளும், அரச ஊழியாகளும் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர்.

water_oil_kinaru-(1)

பதிவாளர் பற்றி

கருத்தை பதிக

உங்களின் மின்னஞ்சல் வெளியிடப்படமாட்டாது. அவசியமான களங்கள் குறியிடப்பட்டுள்ளது. *

*

Scroll To Top