வாழ்வியல் பற்றி சுவாமி அரவிந்தர் சொன்னவை

images

வாழ்வில் இறைவனை வெளிப்படுத்துவதே மனிதனுக்கு விதிக்கப்பட்ட மகத்தான வேலை. விலங்கிற்குரிய உயிர்த் தத்துவமும் செயல்களும் அவன் தொடக்கம், ஆனால் அவன் அடைய வேண்டிய இலக்கோ முழு தெய்வத்தன்மையாகும்.

நமது வழி முழுமைய அடையும் வழியாக இருக்கட்டும், விட்டுவிட்டு ஓடிவிடும் வழியாக இருக்க வேண்டாம்; போரில் வெற்றி பெறுதல் நமது நோக்கமாக இருக்கட்டும், எல்லாப் போராட்டத்திலிருந்தும் தப்பிச் செல்லுவதாக இருக்க வேண்டாம்.

யோகத்தின் மூலம் நாம் பொய்மையிலிருந்து உண்மைக்கும் பலவீனத்திலிருந்து சக்திக்கும்இ துன்பம் துயரத்திலிருந்து பேரின்பத்திற்கும் அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கும் மரணத்திலிருந்து அமர நிலைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் குழப்பத்திலிருந்து தெளிவிற்கும் முடிவின்மையிலிருந்து முடிவிற்கும் பிரிவிலிருந்து ஒன்றுபடுவதற்கும் உயரலாம்.

உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே எதையும் வெறுக்காதே யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும் துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய் வெற்றியானாலும் தோல்வியானாலும் சாவானாலும் சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய். தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?

நம் உள்ளேயே மெய்ப்பொருளைக் காண வேண்டும். அவ்வாறே பூரண வாழ்வின் மூலத்தையும் அடித்தளத்தையும் நம் உள்ளேயே காணவேண்டும். புற அமைப்புகள் எதுவும் அதைத் தரமுடியாது. உலகிலும் இயற்கையிலும் உண்மையான வாழ்வைப் பெறவேண்டுமானால் உள்ளே உண்மையான ஆன்மாவை அடைய வேண்டும்.

மீண்டும் உனக்குச் சொல்கிறேன் வலிமையுடையவனும் துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும் பலவீனனும் கடவுளை அடைவதில்லை.

நம்பிக்கை மனிதனுக்கு இன்றியமையாதது. நம்பிக்கையின்றி ஆன்மீகப் பாதையில் முன்செல்ல முடியாது. ஆனால் நம்பிக்கையை ஒருவன் மீது திணிக்கக்கூடாது. அது சுயமாக உணர்ந்து வரவேண்டும் அல்லது அந்தராத்மாவின் மறுக்க முடியாத வழிகாட்டுதலாக வரவேண்டும்.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply