அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர்

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் அரசு உதவி இயக்குனராக பணியாற்றிவரும் யூசப் சலீம் பிறவியிலேயே பார்வை குறைபாடு உடையவர். ஆனாலும், அந்நாட்டின் சிவில் நீதிமன்ற நீதிபதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். தேர்வெழுதிய 300 பேரில் யூசப் சலீம் 21வது இடத்தை பிடித்தார். ஆனால் அவரது பார்வைக்குறைப்பாட்டை காரணம் காட்டி அவருக்கு மாவட்ட சிவில் நீதிபதி பதவி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் யூசப் சலீம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார், அனைத்து தகுதிகளையும் உடைய ஒருவர் பார்வை குறைபாடு உடைய காரணத்தினாலேயே அவருக்கு நீதிபதி பதவி மறுக்கக்கூடாது என லாகூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், யூசப் சலீமை மாவட்ட சிவில் நீதிபதியாக நியமிக்க லாகூர் உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிபதிகள் தேர்வு கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் அந்நாட்டின் முதல் பார்வையற்ற நீதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.

Sharing is caring!