அவர் வருவாரா? அவர் வருவாரா? காவிரிக்காக ஓரணியில் கூடுவாரா?

சென்னை:
அவர் வருவாரா? அவர் வருவாரா? ஓகே கமல்… நீங்க கூப்பிட்டு விட்டீங்க. அவர் வருவாரா என்று கேட்கின்றனர் மக்கள். எதற்காக?

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

சென்னையில் வரும் 19ம் தேதி நல்லக்கண்ணு தலைமையில் காவிரி ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதற்கு நேரில் அழைப்பு விடுக்க கமல், ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.
சந்திப்புக்கு பின், கமல் கூறுகையில், காவிரி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தேன். திருநாவுக்கரசர், தினகரன், விஜயகாந்த், தமிழிசை, கே.பாலகிருஷ்ணன், வேல்முருகனுக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி அழைப்பு விடுத்துள்ளேன்.

ரஜினியையும் தொடர்பு கொண்டு அழைக்க உள்ளேன். ஆளுங்கட்சியை அழைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன்.
என்னுடைய அழைப்பை ஏற்று அனைவரும் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இது கூட்டணிக்காக அல்ல; காவிரிக்காக தமிழர்கள் என்ற முறையில் ஓரணி திரள உள்ளோம். பக்கத்து மாநிலங்களில் மக்கள் பிரச்னை என வரும் போது அனைவரும் ஒன்றாக திரள்கின்றனர். கட்சிகள் கருத்து வேறுபாடுடையவையாக இருந்தாலும், காவிரி தொடர்பான உரையாடல் தொடர வேண்டும். ‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்பதே ஆலோசனை கூட்டத்தின் பெயர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சந்திப்பு குறித்து ஸ்டாலின் கூறுகையில், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து 17ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.

நன்றி – பத்மா மகன், திருச்சி

Sharing is caring!