கனடா நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிரொலித்த தமிழர் விவகாரம்

கனடாவில் லிபரல் கட்சி பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துவிட்டன. கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சி தமிழர்களுக்கான தேர்தல் அறிக்கையினை (Platform for Tamils) வெளியிட்டு தாம் பதவிக்கு வந்தால் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து தமிழர்களின் பெருமளவான வாக்குகளைபெற்றுக்கொண்டது என்பது யாவரும் அறிந்த உண்மை.

சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்தது.

1. இலங்கையில் பொறுப்புக் கூறல் (Accountability in Srilanka)
2. நிரந்தர அரசியல் தீர்வு (Permanent political solution)
3. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் (Assisting the war affected families) என்பன இருந்தன.
இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது என்றும் முழங்கப்பட்டது.

‘பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு, மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார் என்றும் பெருமையாகத் தெரிவிக்கப்ட்டிருந்தது. இன்றுவரை மேலே சொல்லப்பட்ட மூன்று கடப்பாடுகளில் எதுவாகினும் நடந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இதுவரை லிபரல் அரசாங்கத்தில் இருந்து பதில் எதுவும் இல்லை.
எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் கட்சியின் Sherwood Park – Fort Saskatchewan நாடாளுமன்ற உறுப்பினரான Garnett Genuis MP நேரடியாகவே இது குறித்து நாடாளுமன்றத்தில் வைத்துக் இரண்டாவது முறையாக கேள்வி எழுப்பினார். அதற்கு வெளியுறவு உதவி அமைச்சர் Matt Decourcey MP ஒரு மழுப்பலான பதிலைகொடுத்ததைத்தான் காண முடிந்தது.

கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தினை இவ் ஒளிநாடாவில் பார்வையிடலாம்.


இதற்கு முன்பு, கொன்சவேடிவ் அரசாங்கம் பதவியில் இருந்தபோது சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து 2013ஆம் ஆண்டு கொழும்பில் நடந்த பொதுநலவாய மாநாட்டினைப் அன்றைய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் பகிஸ்கரித்திருந்தார் என்பது இங்கு நினைவுறுத்தப்பட வேண்டும்.

மேலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்புரிமை நோக்கிய நகர்வில் கனடா தனக்கு ஆதரவான நாடுகளை பட்டியலிட்டு அவற்றுடன் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது நாம் அறிந்ததே.

அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதனால்தான் ஸ்ரீலங்கா அரசின் தமிழர் மீதான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களைக் கவனத்தில் கொள்ளாமல் அதனுடன் உறவுகளை பேணும் வகையில் தாம் முன்னர் சொன்ன இலங்கையில் பொறுப்புக் கூறல், நீண்ட கால அரசியல் தீர்வு, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் என்ற மூன்று கடப்பாடுகளையும் ஜஸ்ரின் அரசு பின்போட்டு வருகிறது.

ஒரு அரசாங்கமாக இயங்கியும் இந்த நடவடிக்கைகளை செய்வதில் லிபரல் கட்சியினர் பின்நிற்கும் பட்சத்தில், இந்த அரசாங்கத்தினருக்கு உரிய அழுத்தம் கொடுக்குமாறு இங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் ஊடகங்களும் மட்டுமல்ல, பொதுமக்களும் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கிக் கேள்விகளை எழுப்பிட வேண்டும்.

Sharing is caring!