சாப்பிடாதீங்க… தயிராக சாப்பிடாதீங்க… மோராக்கி சாப்பிட்டால் ஆரோக்கியம் உயரும்!

திருச்சி:
இந்தியர்களின் உணவில் பால், தயிர், மோர் இவை மூன்றும் தவிர்க்க முடியாத பதார்த்தங்கள். அதிக ஊட்டச்சத்து உள்ள உணவாக மட்டுமில்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் உள்ளது. ஆனால் இதை அளவாக பயன்படுத்த வேண்டும்.

பால் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு உபாதைகளும் உண்டு. கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக தயிர் சாப்பிடும் போது அளவாக பயன்படுத்த வேண்டும். தயிரை விட மோர் பயன்படுத்துவது சிறந்ததாகும். தயிர் குளிர்ச்சி என, நினைத்து பலர் சாப்பிடுகின்றனர்.

அதை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக்கியும் சாப்பிடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. தயிர் உடல் சூட்டை அதிகமாக்கும். பிரிட்ஜில் வைத்தால் சூடு மேலும் அதிமாகும். தயிரில் உள்ள நன்மைகள் குறைவு. தயிர் சாப்பிட்டால் மலச்சிக்கல் வரும். உடலில் கொழுப்பைக் கூட்டி, ஏகப்பட்ட உபாதைகளைக் கொடுக்கும். ஹார்மோன்களின் சுரப்பை அதிகமாக்கும்.

கண்டிப்பாக தயிரை இரவில் சாப்பிடக்கூடாது. பனி கொட்டும் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மாதங்களிலும், கோடை துவங்கும் தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களிலும் சாப்பிடக்கூடாது. ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.

தயிரை விட மோர் சிறந்ததாகும். வெறுமனே தயிரில் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டால், அது மோர் ஆகிவிடாது. தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்துவிட்டு, எஞ்சியிருக்கும் தயிரில், சரிபங்கு தண்ணீரைச் சேர்த்து நன்கு கலக்கினால்தான் மோர் கிடைக்கும். மோர் எளிதாக ஜீரணமாகிற உணவு.

சாப்பிட்ட பிறகு மோர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!