21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில்

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நாளை கோலாகலமாக துவங்க இருக்கிறது. மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு ரஷ்யா தயார் நிலையில் உள்ளது.

இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவை பல்வேறு சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன.

இந்திய நேரப்படி இரவு 8. 30க்கு இந்த ஆட்டம் துவங்குகிறது. அதற்கு முன் பிரம்மாண்ட துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் முதலில் 500 உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நடனம், இசை என கோலாகலமாக இருக்கும்.

மேலும் ரஷ்யாவில் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸ் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது.

பிரபல ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சி அடுத்து நடக்கிறது. வீரர்கள் சார்பில் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசிலின் ரொனால்டோ துவக்க விழாவில் பங்கேற்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர், லிவ் இட் அப் என்ற உலகக் கோப்பை பாடலை பாடுகின்றனர். இதைத் தவிர துவக்க விழாவில் பல்வேறு நிழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.

கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நாக் அவுட் சுற்றில் விளையாடும். 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பை இறுதி சுற்று போட்டிக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

இந்த துவக்க விழா மற்றும் முதல் போட்டியைப் பார்ப்பதற்கு மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தவிர உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பாகும் துவக்க விழாவை, கோடிக் கணக்கான மக்கள் பார்க்க இருக்கிறார்கள்.

Sharing is caring!