அனலைதீவில் பசுமாடுகள் இறைச்சிக்காக ஏற்றுவதற்கு முயற்சி

யாழ்ப்பாணம் தீவகம் அனலைதீவில் வவுனியா வீரபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் அங்கிருக்கும் ஒரு சிலரின் மற்றும் சில அமைப்புக்களின் உதவியுடன் பசு மற்றும் எருது மாடுளை குறைந்த விலைகொடுத்து வாங்கி வவுனியா வீரபுரத்திற்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந்துக்கள் அதிகமாக வாழும் அனலைதீவில் கடந்த சில தினங்களாக வவுனியா வீரபுரத்தை சேர்ந்த நபர் ஒருவரால் 15ற்கும் மேற்பட்ட பசுமாடுகளும் 5ற்கும் மேற்பட்ட எருது மாடுகளும் வாங்கப்பட்டு அனுமதிப்பத்திரம் இல்லாமல் இன்று காலை அனலைதீவு துறைமுகத்திலிருந்து படகின் மூலம் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் துறைமுகத்தை நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் இளைஞர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகளால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாடுகளை பொதுமக்களிடம் வாங்கியவர் அனலைதீவை பூர்வீகமாக கொண்டவராவார். வவுனியா வீரபுரத்தில் வசித்துவரும் குறித்த நபர் பண்ணை வைத்திருப்பதாகவும் அதற்காகவே மாடுகளை வாங்கிச்செல்வதாகவும் குறிப்பிடுகின்றார. உரிமையாளர்களிடமிருந்து மாடுகளை அடையாளப்படுத்தி அனலைதீவு விவசாய கால்நடைகள் சம்மேளனம் இதற்கான உறுத்திப்படுத்தலை மேற்கொள்கின்றது. ஆனால் அனலைதீவில் உள்ள மாடுகள் நல்லின கறவை மாடுகள் இல்லை எனவும் பண்ணையில் வைத்து இலாபம் பெறக்கூடிய மாடுகள் இல்லை எனவும் இந்த மாடுகள் இறைச்சிக்காகவே கொண்டு செல்லப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு சில மக்கள் வறுமை காரணமாக மாட்டை விற்றதாக கூறுகின்ற போதிலும் அந்த மாடுகளை அனலைதீவில் உள்ள மாடுகள் இல்லாத குடும்களுக்கோ அல்லது சமூக அமைப்புக்கள் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இவ்வாறு வவுனியாவிற்கு ஏற்றப்படுவது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

மாடுகளை கொள்வனவு செய்யும் குறித்த நபர் முன்னாள் வடமாகாண விவசாய மற்றும் கால்நடைகள் அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனிடம் பெறப்பட்ட கலாவதியான அனுமதிப்பத்திரம் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இன்றையதினமே அனுமதி தொடர்பாக ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் அழைத்திருந்தபோதும் இன்று காலை மாடுகள் படகில் ஏற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அனலைதீவு கிராமசேவகருக்கு இந்த விடயம் தொடர்பாக எந்த வித பத்தரங்களும் அனுமதியும் பெறாமல் இன்று காலை மாடுகள் ஏற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த நபர் இந்த விடயம் தொடர்பாக யாழ் அரச அதிபர் மூலம் ஊர்காவற்றுறை பிரதேச செயலரிடம் அனுமதி பெறுவதற்கான முயற்சிளை மேற்கொண்டுள்ளார்.

அனலைதீவு பொது மக்கள் ஒரு சில இந்த மாடுகளை ஏற்றுச்செல்வதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற போதும் அதிகளவான மக்கள் இதனை எதிர்க்கின்றனர். இது தொடர்பாக மக்கள் பிரதிநிகளான மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் விந்தன் கனகரத்தினம் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைத்தலைவர் ஜெயகாந்தன் ஆகியோரிடமும் மக்கள் சார்பில் முறையிடப்பட்டுள்ளமையும் குறிப்படத்தக்கது. மாடுகளை இறைச்சிக்காக ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் மாடுகளை ஊரில் உள்ள மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்கள் வேண்டிநிற்கின்றனர்

Sharing is caring!