பிரித்தானிய பொதுத்தேர்தல் பிரசாரங்களுக்காக தயாராகும் அரசியல் கட்சிகள்

party-leaders-2பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளுக்காக முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகிவருகின்றன.

பொதுத் தேர்தலுக்கான ஒப்புதலை நாடாளுமன்றம் வழங்கியுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையில் கட்சிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா தனக்குள்ள அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பிரதமர் தெரேசா மேயின் அழைப்பிற்கு நாடாளுமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பிற்கு 522 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 13 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளதால், நாடாளுமன்ற மேல்சபையின் அனுமதியும்தேவையில்லை. எனவே தேர்தலுக்கு முன்கூட்டியே அடுத்தமாதமளவில் நாடாளுமன்றை கலைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ஸ்டீவென்ஸன், “மிகக்குறுகிய கால தேர்தல் பிரசாரங்களை நடத்திய வரலாறு இந்த நாட்டில் எமக்கு உண்டு. எனவே இது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. முன்னைய தேர்தல்களிலும் இவ்வாறு நடைபெற்றுள்ளது. எமக்கு ஆறு முதல் ஏழு வாரங்கள் முழுமையாக உள்ளன. பிரித்தானிய மக்கள், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாய்ப்பு வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1920ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியாவில் நடைபெறும் 9 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

இரண்டாவது சுதந்திர வாக்கெடுப்பிற்கான ஸ்கொட்லாந்தின் வலுவான கோரிக்கைகளுக்கு மத்தியில் பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு இடையில் பிரெக்சிற் அடிப்படையில் அதிக வேறுபாடுகள் நிலவுகின்றன.

எனினும் தீவிரமான அணுகுமுறைகள் மூலம் எதிர்க்கட்சிகள் தமது இலக்கினை அடைவதற்கு எதிர்வரும் ஜூன் தேர்தல் வாய்ப்பாக அமையும் என்றே கருதப்படுகின்றது.

Sharing is caring!

This post has 0 comments

Leave a reply