கடுமையான சளி, இருமல், தலைவலியை போக்க…

குளிர்காலம் என வந்துவிட்டாலே சளி, காய்ச்சல் என நாம் அவதிப்படுவது சகஜம் தான். காய்ச்சல் வருவதற்கான பொதுவான அறிகுறிகளே சளியும் இருமலும். இருமல் வந்துவிட்டால், குளிர்காலத்தில் நீங்கள் போட்டு வைத்திருந்த திட்டங்களை எல்லாம் குலைத்து விடும். தொடர்ச்சியாக இருமல் வந்தால், உங்கள் நெஞ்சில் வலி ஏற்பட்டு உடலும் சோர்வடைந்து விடும். இருமல் வருவதற்கு காய்ச்சலைத் தவிர அலர்ஜிகள், ஆஸ்துமா, வறண்ட காற்று மற்றும் புகையையும் கூட காரணமாக சொல்லலாம்.

இருமலில் இருந்து உடனடி நிவாரணத்தை பெறுவதற்கு பலரும் அல்லோபதி சிகிச்சைகளை நாடி செல்கின்றனர். அது தான் மிகச்சிறந்த தேர்வு எனவும் நினைக்கின்றனர். ஆனால் அதை விட சிறந்த இயற்கை சிகிச்சைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? அவைகளை பயன்படுத்தினால் இருமலில் இருந்து உடனடி தீர்வை காணலாம்.

எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இருமலை குணப்படுத்த சில பொருட்கள் உள்ளது. அவைகளை உங்கள் சமயலறையில் இருந்தே நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கடுமையான மற்றும் தீவிரமான இருமலை கட்டுப்படுத்த வாழ்வு முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும். இதோ இருமலை உடனடியாக போக்குவதற்கான சில வீட்டு சிகிச்சைகள்.

தேவையான பொருட்கள்:

  • சுக்கு: 50 கிராம்
  • மிளகு: 50 கிராம்
  • திப்பிலி: 50 கிராம்
  • தேன்: சிறிதளவு
  • நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம்: தேவையான அளவு.

செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் திரிகடுகம் என்பார்கள். மனிதனின் உடல் ஆரோக்யத்தில் இதன் பங்கு அதிகம். சளி, இருமல், கபம், ஆஸ்துமா போன்ற சுவாச மண்டலத்துடன் தொடர்புடைய நோய்களுக்கு இந்த திரிகடுகம் கண்கண்ட மருந்து. மேலே சொல்லப்பட்ட மூன்று பொருட்களையும் சொல்லப்பட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து நைஸான பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு கிராம் எடுத்து சுத்தமான தேன் கலந்து சப்பிட்டு வர விரைவில் சளி, இருமல், கபக்கட்டு அகலும்.

இப்படி அருந்துவது போர் என்று நினைப்பவர்கள். சுக்குமல்லிக் காஃபீ போல இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் கலந்து அருந்தலாம். கூட நாலு ஏலம் கலந்தால் மணக்க, மணக்க இந்த திரிகடுக காஃபீ நாக்கைச் சுண்டி இழுக்கும்.

சுக்குமல்லியில் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்துவோம், திரிகடுகத்தில் திப்பிலி சேர்க்கிறோம் அவ்வளவு தான் வித்யாசம். இதில் திப்பிலி இருக்கிறதே அது மிளகைக் காட்டிலும் காரம் அதிகமானது. எனவே கார்ப்புச் சுவை வேண்டாம் என நினைப்பவர்கள் திப்பிலியின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

காய்ந்த இஞ்சி தான் சுக்கு எனவே மூன்றையும் சில மணி நேரங்கள் வெயிலில் காய வைத்து எடுத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கெல்லாம் சளித்தொல்லை, இருமல், கபம் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் திரிகடுக காஃபீ போட்டுக் கொடுத்து அருந்த வைத்து சளித்தொல்லையிலிருந்து தப்பலாம்.

Sharing is caring!