கேசத்தை நேசிங்க

ரோமம்’ எனப்படும் முடியை வெகு அலட்சியமானதாகப் பேச்சுவழக்கில் கூறுகிறோம். ஆனால் உண்மையில் முடியின் மதிப்பும், பயன்களும் அளவற்றவை. சிறந்த சுட்டிக்காட்டியான முடி, மனஅழுத்தம், சத்துப் பற்றாக் குறைகள், சமச்சீரற்ற நிலை, வயது, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மாசு, வியாதி, நச்சுப் பாதிப்பு போன்ற பல விஷயங்களை சுட்டிக்காட்டக் கூடியது.

உயிரினங்களில் பாலூட்டிகளில் மட்டும் காணப்படும் முடி, கதகதப்பை அளிக்கிறது, தூசி தும்புகளில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கிறது, ஈரப்பதத்தைக் காக்கிறது. நமது உடலமைப்பில் உள்ள திசுக்கள், எலும்புகள், உறுப்புகளுக்கு இணையாக முக்கியத்துவம் பெற்றது, முடி.

முடி இழப்பு அதிகரித்துக் கொண்டே போவது `அலோபேசியா’ எனப்படுகிறது. (கிரேக்க மொழியில் `அலோபெக்ஸ்’ என்றால், நரி.) இதன் இறுதிநிலை, வழுக்கையாகும். ஹார்மோன் சிக்கல்கள், மருந்துகள், மன அழுத்தம், பாரம்பரியம் போன்றவை `வழுக்கை’க்குக் காரணமாகின்றன.

புரதம், இரும்புச் சத்து, அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் முடியை அடர்த்தியாக்கி, வளப்படுத்தும் தன்மை கொண்டவை. முடி உதிர்வு, சத்துப் பற்றாக்குறையையும் குறிக்கும்.

மனிதர்களுக்கு முடி குட்டையாகவும், மென்மையாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கிறது. இதேபோல ஆப்பிரிக்காவாழ் பாலூட்டிகளான யானைகளுக்கும், நீர்யானைகளுக்கும் ரோம அமைப்பு உள்ளது.

பாலூட்டிகளின் உடம்பு முழுவதும் முடி காணப்படுகிறது. புருவ முடிகளும், இமை முடிகளும் கண்களைக் காக்கின்றன. மூக்குத் துவாரங்களிலும், காதுகளுக்குள்ளும் காணப்படும் நுண் முடிகள், அவற்றுக்குள் நுண்ணுயிரிகள், தூசி தும்புகள் நுழையாமல் தடுக்கின்றன.

Sharing is caring!