பனி காலத்தில் உங்கள் உடலை பராமரிக்கும் வழிகள்..!!

பனி காலம் இதமானதுதான். ஆனால், சருமத்தில் அதிகம் பிரச்னைகளை ஏற்படுத்துவதும் பனிகாலம்தான். நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரையிலும் தன் சாம்ராஜ்ஜியத்தைத் தொடரும் பனியிடமிருந்து நம் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? எளிமையான வழிகளைச் சொல்கிறார் சரும நல மருத்துவர் ரெனிட்டா ராஜன்.

குளிர்காலத்தில் என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகளை செய்துகொள்ள வேண்டும்?

‘‘குளிர்காலத்தில் சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படும். சரும வறட்சி பரம்பரைத் தன்மையால் சிலருக்கு இயற்கையாகவே வரும். மருந்துகள், மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறவர்களுக்கும் சரும வறட்சி ஏற்படும். பருக்கள் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், அதிக நேரம் பயணத்தில் இருக்கிறவர்களுக்கும் இதே பிரச்னை வரலாம். இதற்கு தண்ணீர் நிறைய குடிப்பது, நல்ல சோப்பை பயன்படுத்துவது, முடிந்தால் குளித்தபிறகு மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துவது போன்ற விஷயங்களைப் பின்பற்றினாலே போதும்.’’

‘வைட்டமின் டி’ கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு நேரம் வெயில் பட வேண்டும்?

‘‘வைட்டமின் டி’ யைப் பொறுத்தவரை சூரிய ஒளியில் இருந்து கிடைப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல. எனவே, ‘வைட்டமின் டி’ பற்றாக்குறை இருந்தால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதே சரியானது. அதற்காக பற்றாக்குறை இல்லாத பட்சத்தில் மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும் என்பதையும் மறக்கக்கூடாது.’’

என்னென்ன சருமப் பிரச்னைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும்?

‘‘இது தனிநபரின் உடல் அமைப்பைப் பொறுத்தது. சிலருக்கு முகம் முழுவதும் பருக்கள் இருந்தாலும் அது ஒரு பிரச்னையாக இருக்காது. அழகியல் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் சின்ன சுருக்கம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைத் தேடி வந்துவிடுவார்கள். முடி கொட்டுகிற பிரச்னைக்குக்கூட முதலிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டு விடுவது நல்லது. முடி நிறைய கொட்டிய பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதற்கேற்றவாறுதான் பலன் கிடைக்கும். 40 வயதில் சேதம் அடைந்துவிட்டது என்று வருவதைவிட 30 வயதிலேயே பார்ப்பது சிறந்தது.’’

தினசரி வாழ்வில் எல்லோராலும் பின்பற்ற முடிகிற சில எளிமையான டிப்ஸ்…

‘‘தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். வெளியில் சென்றுவிட்டு வரும்போது நன்றாக முகம் கழுவிக் கொள்ள வேண்டும். முடிந்தால் மைல்டு ஃபேஸ் வாஷ் உபயோகப்படுத்தலாம். ஸ்க்ரப் உபயோகப்படுத்துவது சருமத்தை சேதப்படுத்தும். அதனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. கருமையடைந்த இடத்தைத் தேய்ப்பதால் இன்னும் அதிகமாகக் கருமையடையும். ஜங்க் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தலையில் எண்ணெய் வைத்து அழுத்தமாகத் தேய்க்கக்கூடாது. மென்மையாக மசாஜ் செய்வதுபோல் தேய்ப்பதுதான் முடிக்கு பாதுகாப்பு!’’

Sharing is caring!