அகதிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய அமெரிக்க ராணுவம்

திஜுவானா:
அகதிகளை கண்ணீர் புகை குண்டுகளை வீசி அமெரிக்க ராணுவம் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா வளமான தேசமாக இருந்தபோதும், மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுரஸ், பனாமா, கவுதமாலா ஆகியவை கடும் வறட்சியில் தவிக்கின்றன. வன்முறை, வறுமை காரணமாக அங்கு உயிர்வாழ வழியின்றி அகதிகளாக அமெரிக்காவில் தஞ்சமடைகின்றனர்.

இவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். அவ்வாறு அகதிகளாக வருவோரின் குழந்தைகளை பிரித்த பிரச்னையில் டிரம்ப் மீது உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அந்த திட்டத்தை கைவிட்ட டிரம்ப், அகதிகள் நுழைவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க – மெக்சிகோ எல்லை நகரம் திஜுவானா. அங்கிருந்து சாண்டியாகோ நகர் வழியாக அமெரிக்காவில் நுழைந்துவிடலாம். திஜுவானாவில் 500க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் நுழைவதற்காக வந்தனர்.

இதனால் எல்லை பகுதி மூடப்பட்டது. ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டது. இந்நிலையில் சிலர் ஒரே நேரத்தில் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை தாண்டிச் செல்ல முற்பட்டனர். பாதுகாப்புப்படையினர் தடுத்தும் அவர்கள் தொடர்ந்து முன்னேறினர்.

இதையடுத்து ராணுவம், பாதுகாப்புப்படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அகதிகளை விரட்டி அடித்தனர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!