அண்டை நாடுகளுடன் நட்புறவு… பாகிஸ்தான் புதிய பிரதமர் இம்ரான் கான்

அண்டை நாடுகளுடன் அமைதி ஏற்பட்டால் மட்டுமே பாகிஸ்தானில் அமைதி நிலவும் என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 18ல் பாகிஸ்தான் நாட்டின் 22வது பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், முதன்முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர், “பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி உள்ளது. தற்போது 28 டிரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சம் கோடி) கடன் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு பொருளாதார நிலைமை இப்போது இருக்கிறது. இதற்கு முழுவதுமாக முந்தைய ஆட்சியாளர்கள் தான் காரணம். இதனை சரிசெய்யும் பொருட்டு பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

அதேபோன்று, முதலில் அண்டை நாடுகளுடன் அமைதி இருந்தால் தான் பாகிஸ்தானில் அமைதி நிலவும். அதற்கான அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. நான் மிகவும் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். மேலும் நான் தனிப்பட்ட முறையில் எந்த தொழிலும் ஈடுபட போவதில்லை. சட்டவிரோதமாக பணம் வைத்திருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் எப்போதும் என் எதிரிகள். அப்படிப்பட்ட எதிரிகளை கண்டுபிடிக்க மக்களாகிய நீங்கள் எனக்கு உதவு வேண்டும்.

அரசுக்கு ஆகும் செலவுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊழியர்களை குறைத்தல், ஆடம்பரங்களை குறைத்தல் மூலமாக அரசுக்கு ஏற்படும் செலவு குறையும். ஒட்டுமொத்தமாக ஒரு புதிய பாகிஸ்தான் உருவாகும்” என தெரிவித்தார்.

Sharing is caring!