அண்ணனுக்கு எதிராக கட்சி தொடங்கினார் தம்பி
லக்னோ:
செம போட்டி தொடங்கிடுச்சு… தொடங்கிடுச்சு… அண்ணனுக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கி உள்ளார் தம்பி.
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சகோதரரும், அக்கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட எம்.எல்.ஏ.,வுமான, சிவ்பால் யாதவ், மதச் சார்பற்ற சமாஜ்வாதி என்ற புதிய கட்சியை துவக்கியுள்ளார்.
உ.பி.,யில் எதிர்கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. கட்சி நடவடிக்கைகளில் இருந்து, சிவ்பால் யாதவ் சமீபகாலமாக ஓரம்கட்டப்பட்டார். இந்நிலையில், மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்ற புதிய கட்சியை, சிவ்பால் யாதவ் துவக்கினார்.
இதுகுறித்து நிருபர்களிடம், அவர் கூறியதாவது:
சமாஜ்வாதி கட்சியில் இருந்து, இரண்டு ஆண்டுகளாக, ஓரம்கட்டி வைக்கப்பட்டுள்ளேன். முலாயம் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால், அவரது மகன் அகிலேஷ் யாதவ், எனக்கு எந்த பொறுப்பும் வழங்க மறுக்கிறார்.
கட்சி நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு இல்லை. எனவே, மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளேன். சமாஜ்வாதி கட்சியில், ஓரங்கட்டப்பட்ட தொண்டர்கள் அதிகம் உள்ளனர். அவர்களை ஒன்று திரட்டி, புதிய கட்சியை வலுப்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.