“அண்ணா”வின் அருகில் அடக்கம் செய்யப்பட்டார் “தம்பி”
சென்னை:
சென்னை ராஜாஜி ஹாலில் இருந்து தொடங்கிய கருணாநிதியின் இறுதிப்பயணம் அண்ணா நினைவிடத்தை அடைந்தது.
நேற்று மாலை திமுக தலைவர் கருணாநிதி காலமானார். இன்று காலை முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு தரப்பினரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 4 மணியளவில் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக ராணுவ வாகனத்தில் ஏற்பட்டது. முக்கிய சாலைகள் வழியாக அண்ணா நினைவிடத்தை நோக்கி கருணாநிதியின் இறுதிப்பயணத்தை தொடங்கியது. திரண்டு நின்ற மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தனது இறுதிப்பயணத்தை தொடங்கிய கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்தை அடைந்தது.
அங்கு மு.க. அழகிரி, செல்வி, பேராசிரியர் அன்பழகன், காங்., தலைவர் ராகுல்காந்தி, தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திருநாவுக்கரசர் உட்பட முக்கிய பிரமுகர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து ராணவ வாகனத்திலிருந்து கருணாநிதியின் உடல் ராணுவ மரியாதையுடன் இறக்கப்பட்டது.
ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்., தலைவர் ராகுல்காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கருணாநிதி உடல் மீது போர்த்தப்பட்டு இருந்த தேசியக் கொடியை ராணுவத்தினர் அகற்றினர். குடும்பத்தினர் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினர். ராணுவத்தினர் குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல் அடக்கம் செய்யப்பட்டது.
நன்றி- பத்மா மகன், திருச்சி