அதிகாலை வீசிய பலத்த காற்றால் சேதம், இருளடைந்துள்ளது

குன்னுார் மற்றும் கோத்தகிரி பகுதியில், நேற்று அதிகாலை வீசிய பலத்த காற்றால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன; இதனால் போக்குவரத்து பாதித்தது; வீடுகள் சேதமடைந்ததுடன், மின்கம்பங்கள் சாய்ந்ததால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு நாட்களாக, துாறல் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று அதிகாலை முதல், காற்றின் வேகம் அதிகரித்தது. காற்றின் வேகத்துக்குத் தாக்குப் பிடிக்காமல், பல இடங்களில் மரங்கள் வேருடன் பெயர்ந்து விழுந்தன.
குன்னுார் – கோத்தகிரி சாலையில், சைக்கிள் பாலம் மற்றும் சம்பூர்ணா ஆஸ்ரமம் பகுதியில், நேற்று அதிகாலை அடுத்தடுத்து, நான்கு மரங்கள் விழுந்தன.இதனால், கோத்தகிரி – குன்னுார் சாலையில் காலை, 7:00 மணி முதல் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர், உடனுக்குடன் மரங்களை அறுத்து அகற்றியதை அடுத்து, போக்குவரத்து சீரானது.

இதே போல, குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில், பலத்த காற்றுவீசியதால், பெரிய கற்பூர மரம், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விழுந்தது. இதில், ரபீக் என்பவரது வீட்டின் ‘சன் சைட்’ இடிந்து நொறுங்கியது. மின்கம்பத்தின் மீது மரம் விழுந்ததால், இரண்டு மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது.

இதனால், ஒட்டுப்பட்டறை பழைய அருவங்காடு செல்லும் சாலையில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட துறையினர் மரங்களை அகற்றியதை அடுத்து போக்குவரத்து சீரானது. அருவங்காடு ஒசஹட்டி பகுதியிலும் மரம் விழுந்து, ஒரு வீடு சேதம் அடைந்தது.இதேபோல், குன்னுார் இளித்தொரை பகுதியில் நேற்று மாலை விழுந்த கற்பூர மரத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு குமார் தலைமையில், முன்னணி வீரர்கள் கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் மரத்தை வெட்டி அகற்றினர்.

குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். ஆங்காங்கே விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஞாயிற்றுக் கிழமையிலும் ஊழியர்கள் பணியாற்றினர்.இதேபோல், மஞ்சூர் – இத்தலார் சாலை, கிண்ணக்கொரை, அப்பர்பவானி சாலையில் விழுந்த 3 மரங்களை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி – தலைகுந்தா சாலையில் விழுந்த மரத்தை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.

Sharing is caring!