அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் விவகாரத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் இங்கிலாந்தில் 4 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் பிரதமர் தெரசா மே நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 51.89 சதவீத மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். 48.11 சதவீத மக்கள் அந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தனர்.

பெரும்பான்மையான மக்களின் ஆதரவை அடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலக முடிவு செய்தது. இது ‘பிரெக்ஸிட்’ என அழைக்கப்படுகிறது. இதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் அப்போதைய பிரதமர் டேவிட் கெமரூன் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்.

அவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகுவது தொடர்பில் அக்கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இப்போது அது தொடர்பாக 585 பக்கங்களைக் கொண்ட ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பற்றி நேற்று முன்தினம் 5 மணி நேரம் விவாதம் நடத்தி பிரதமர் தெரசா மே தனது அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றார்.

ஆனாலும், பல அமைச்சர்கள் இந்த வரைவு ஒப்பந்தத்திற்கு எதிராகப் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வரைவு ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தனது கருத்தை இன்னும் தெரிவிக்கவில்லை.

இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய கூட்டமைப்பும், இங்கிலாந்தும் கூட்டாக வெளியிட்டுள்ளன. அடுத்த மாதம் (டிசம்பர்) இந்த ஒப்பந்தம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். அந்த வாக்கெடுப்பில் ஒருவேளை தெரசா மே தோல்வியைத் தழுவினால் 21 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை முன் வைக்க வேண்டும். வெற்றி பெற்று விட்டால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த மசோதா ஒரு வேளை தோற்றால் சிக்கலாகி விடும். மீண்டும் பொதுத்தேர்தல், வாக்கெடுப்பு என பிரச்சினைகள் நீளும்.​

இந்நிலையில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் திட்டத்தால் அதிருப்தியடைந்த அமைச்சர்கள் நால்வர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

Sharing is caring!