அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி… மாடு முட்டி ஒருவர் பலி

திருமானூர்:
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதில் மாடு முட்டி ஒருவர் பலியானார். 27 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்துள்ள க.பரதூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும் போலீசாரின் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதையொட்டி, கிராமத்தின் மெயின் ரோட்டில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 150-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் தன்னை பிடிக்க வந்த வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் முட்டியதில் 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சக்திவேல் உள்பட படுகாயம் அடைந்த 9 பேரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமழப்பாடியை சின்னப்பா என்பவர் தான் வளர்த்து வரும் காளையை இந்த போட்டிக்கு கொண்டு வந்திருந்தார். போட்டியில் அவரது காளை அவிழ்த்து விடப்பட்ட பின் அதனை கயிறு போட்டு பிடிக்க காளைகள் ஓடும் வழித்தடத்தின் நிறைவு பகுதியில் கயிற்றுடன் நின்றிருந்தார். அப்போது, அவிழ்த்துவிடப்பட்ட வேறொரு ஜல்லிக்கட்டு காளை திடீரென சின்னப்பாவை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!