அப்பாவிகள்தான்… ஆனால் ஏமாளிகள் அல்ல… இந்துக்கள் பற்றிதான் சொல்றார் சிவசேனா தலைவர்

மும்பை:
அப்பாவிகள்தான்… ஆனால் ஏமாளிகள் அல்ல என்று சிவசேனா தலைவர் தெரிவித்துள்ளார். அவர் யாரை பற்றி சொல்லியிருக்கார் தெரியுங்களா?

”ஹிந்துக்கள் அப்பாவிகள் தான்; ஆனால் ஏமாளிகள் அல்ல,” என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

‘உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும்’ என, பல ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. சிவசேனாவும் இதை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில், அயோத்தி சென்றபோது, ‘ராமர் கோவில் எப்போது கட்டப்படும் என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என, உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலம் பந்தர்புரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உத்தவ் தாக்கரே பேசியதாவது:

ராமர் கோவில் விவகாரத்தில் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது. ஏற்கனவே 30 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது என சாக்கு சொல்லி வருகின்றனர். இந்துக்கள் அப்பாவிகள் தான். ஆனால் ஏமாளிகள் அல்ல.

ராமர் கோவில் கட்டுவதற்கு சில கூட்டணி கட்சிகள் எதிர்ப்பதாக, பா.ஜ., கூறுகிறது. அப்படியானால் இது தொடர்பாக பார்லியில் விவாதம் நடத்தட்டும். யார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பது தெரிந்துவிடும். ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசும் பா.ஜ.,வும் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்.

சமீபத்தில் நடந்த, ஐந்து மாநிலத் தேர்தலில், சத்தீஸ்கரில் சரியான முடிவு எடுத்த மக்களை பாராட்டுகிறேன். யார் முதல்வர் வேட்பாளர் என்பது தெரியாமலேயே, காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். லோக்சபா தேர்தலிலும், யார் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவிக்காமலேயே, எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும், மக்கள் சரியான முடிவை எடுப்பர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!