அப்போ ஹெலிகாப்டர் பயணம்… இப்போ ரயில், பைக்… தோல்வி கற்றுக் கொடுத்த பாடமா!!!

போபால்:
முன்னாள் முதல்வர் ரயில், பைக்கில் பயணம் செய்து மக்களை சந்திக்கிறார். அவர் யார் என்கிறீர்களா?

மத்திய பிரதேசத்தில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின், சிவ்ராஜ் சிங் சவுகான். இவர்தான் ரயில், பைக்கில் பயணம் செய்து, மக்களை சந்திக்கிறார்.

மத்திய பிரதேசத்தில், சமீபத்தில் நடந்த தேர்தலில் மொத்தமுள்ள, 230 தொகுதிகளில் காங்கிரஸ், 114 தொகுதிகளிலும், பா.ஜ., 109 தொகுதிகளிலும் வென்றது.

தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பதவிக்காலத்தின் போது, ஹெலிகாப்டரில் தான் அதிகம் பயணம் செய்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின், சவுகானிடம் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேர்தல் முடிந்ததும், ‘டுவிட்டர்’ சமூகதளத்தில், தன்னை மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என, குறிப்பிட்டிருந்தார். தற்போது அதை மத்தியப் பிரதேசத்தின் சாதாரண பிரஜை என மாற்றி உள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் போபாலில் இருந்து பினாவுக்கு ரயிலில் பயணம் செய்தார். உடன் வந்தவர்களுடன், ‘செல்பி’ எடுத்தார். அதேபோல் போபாலில் உள்ள இரவு காப்பகத்துக்கு சென்று, திடீர் ஆய்வு செய்தார்.

மேலும் கட்சித் தொண்டரின் பிறந்தநாளை தெருவோரத்தில் கொண்டாடினார். சமீபத்தில் ஒரு கிராமத்துக்கு பைக்கில் சென்று, மக்களை சந்தித்து அசத்தினார். சமூக வலைதளத்திலும், முன்பைவிட மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!