அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குனராக சஞ்சய்குமார் நியமனம்

புதுடில்லி:
அமலாக்கத் துறைக்கு புதிய இயக்குனராக சஞ்சய்குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத் துறை இயக்குனராக வருவாய் துறையைச் சேர்ந்த, சஞ்சய் குமார் மிஸ்ராவை நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1984ல், வருவாய் துறையில் பணியில் சேர்ந்தவர், சஞ்சய் குமார் மிஸ்ரா. இவர் தற்போது, டில்லியில், வருமான வரி முதன்மை கமிஷனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அமலாக்கத் துறை இயக்குனராக, சஞ்சய் குமார் மிஸ்ராவை நியமித்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘மூன்று மாதங்களுக்கு, இவர் இந்த பொறுப்பை வகிப்பார்’ என, அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. தற்போது இயக்குனராக உள்ள, கர்னல் சிங்கின் பதவிக்காலம், இன்றுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, விரைவில், அமலாக்கத் துறை இயக்குனராக, சஞ்சய் குமார் மிஸ்ரா பதவி ஏற்பார் என, தெரிகிறது.

மத்திய அரசின் கூடுதல் செயலர் அந்தஸ்து, சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு வழங்கப்படாததால் மூன்று மாதங்களுக்கு, அமலாக்கத் துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில், கூடுதல் செயலருக்கான அந்தஸ்து அவருக்கு அளிக்கப்பட்டு, அமலாக்கத் துறையின் முழு நேர இயக்குனராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!