அமெரிக்காவில் பரபரப்பு: சுதந்திரதேவி சிலை மீது ஏறிய பெண்

அமெரிக்காவில் சுதந்திர தேவி சிலை மீது ஏறிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடற்கரையோரமாக உள்ளது புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலை. அமெரிக்க புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்படுத்தும் விதமாக, பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகிறது.

பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும்.நேற்று இச்சிலை மீது மனித உருவம் ஒன்று செல்வதை நியூயார்க் காவல்துறையினர் பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், சிலையை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மர்ம நபர் சிலை மீது ஏறிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழே அழைத்துவர முயன்றனர். நான்கு மணி நேர போராட்டத்திற்கு அந்த நபரை கீழே கொண்டுவந்தனர். அவர் ஒரு பெண்மணி. பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக அந்தப் பெண்மணி தெரிவித்தார். சிலைமீது அந்த பெண்மணி ஏறிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sharing is caring!