அமெரிக்காவை மிரட்டினால் ஈரானுக்கு பேரழிவுதான்…டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி அமெரிக்கா மீது போர் தொடுக்கலாம் என எச்சரித்து அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, அமெரிக்காவை மிரட்டினால் ஈரான் பேரழிவை சந்திக்கும் என ட்விட்டரில் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடன் அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் போட்ட அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தை ரத்து செய்தார். அந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு சாதகமாக இல்லையென குற்றம் சாட்டிய ட்ரம்ப், ஈரானுடன் தொடர்பு வைக்கும் நாடுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். ஒப்பந்தப்படி ஈரான் நடந்து வந்ததால், ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் தேவையற்றவை என விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்தியா உட்பட உலக நாடுகள் ஈரானுடனான உறவை துண்டிக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், தங்களுக்கு எதிராக ட்ரம்ப் எடுத்து வரும் நடவடிக்கைகளால் கடுப்பான ஈரான் அதிபர் ஹசான் ரூஹானி, “அமெரிக்கா தூங்கும் சிங்கத்தை சீண்டுகிறது. இது தொடர்ந்தால், அந்நாட்டின் மீது உச்சகட்ட போரை ஈரான் தொடுக்கும்” என எச்சரித்து அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்குமாறு ட்விட்டரில் எழுதிய ட்ரம்ப், “ஈரான் பிரதமருக்கு: என்றுமே அமெரிக்காவை மிரட்டாதீர்கள். இல்லையென்றால் சரித்திரத்தில் வெகு சிலர் மட்டுமே பார்த்த பேரழிவை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும். முன்பைப்போல உங்களின் வன்முறை வார்த்தைகளையும், நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ளும் நாடு நாங்கள் கிடையாது. எச்சரிக்கை” என்றார்.

Sharing is caring!