அமெரிக்கா பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள நேரிடும்

பிரிட்டன் பிரதமரின் தற்போதைய பிரெக்ஸிட் திட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்கா பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள நேரிடும் என நேர்காணல் ஒன்றில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், ட்ரம்பின் இந்தக் கருத்திற்கு பிரிட்டன் பிரதமர் அலுவலகம் இதுவரை எதிர்வினையாற்றவில்லை.

அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரிட்டன் சென்றுள்ளார். தெரசா மே அமெரிக்காவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள முனைப்போடு உள்ளார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு வளர்ச்சியை உருவாக்க பிரெக்ஸிட் ஒரு சிறந்த வாய்ப்பு என தெரசா மே கருதுகிறார்.

அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினாவிற்கு நேற்று (12) மாலை பிளென்ஹீம் அரண்மனையில் சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பிற்கு முன்னதாக, பிரெக்ஸிட்டின் நீண்டகால ஆதரவாளரான ட்ரம்ப் ‘தி சன்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில்,

ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உறவு குறித்த பிரிட்டனின் செயற்திட்டமானது மக்கள் வாக்களித்ததற்கு முற்றிலும் மாறான ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறது . பிரதமர் மேவின் இந்த முன்மொழிவு அமெரிக்காவுடனான மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்த உறவை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும்

என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் பிரிட்டனுக்கு வருவதற்கு முன்னர் கூறிய விடயம் இது. தற்போது அந்நிலை கடந்துவிட்டது. பிளென்ஹீம் அரண்மனை இரவு உணவு விருந்து சிறப்பாக, நேர்மறையாக இருந்தது . அங்கே வர்த்தகத்தில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது

என பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் சர் ஆலன் டங்கன் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான நீண்டகால உறவுக்கான முன்மொழிவை பிரிட்டன் அரசு வெளியிட்ட அதே தினத்தில் ட்ரம்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

Sharing is caring!