அமெரிக்க செனட்டர் ஜான் மெக்கெயின் காலமானார்!

அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மற்றும் 2008 தேர்தல் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெயின் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

81 வயதான மெக்கெயின் அமெரிக்காவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுள் ஒருவராவார். ஆரம்ப காலத்தில் விமானப்படை பைலட்டாக இருந்த மெக்கெயின், வியட்நாம் போரில் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் துன்புறுத்தப்பட்டார். போருக்கு பின் அரசியலில் இறங்கிய அவர், குடியரசு கட்சியின் சார்பாக 6 முறை அரிசோனா மாகாண செனட் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு அதிபர் ஒபாமாவுக்கு எதிர் வேட்பாளராக களமிறங்கிய மெக்கெயின், அந்த தேர்தலில் படுதோல்வியடைந்தார்.

தொடர்ந்து அமெரிக்க அரசியலில் முக்கிய குரலாக மெக்கெயின் ஒலித்து வந்தார். தற்போதய அதிபர் ட்ரம்ப்புடன் அடிக்கடி மோதினார். தனது கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ட்ரம்ப்பின் பல்வேறு நடவடிக்கைகளை மெக்கெயின் வெளிப்படையாக விமர்சித்தார். குடியரசு கட்சியில் இருந்து கொண்டே ட்ரம்ப்பின் திட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்ததற்காக எதிர்கட்சிகளால் கூட போற்றப்பட்டார். கடந்த ஆண்டு, மெக்கெயினுக்கு மூளையில் புற்று நோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இரு தினங்களுக்கு முன், தனது புற்றுநோய் சிகிச்சைகளை நிறுத்த மெக்கெயின் முடிவெடுத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று அவரது உயிர் பிரிந்தது.

உடல்நிலை மோசமாக இருந்தபோதே, தனது இறுதி சடங்குகள் பற்றி மெக்கெயின் திட்டமிட்டதாக தெரிகிறது. அதில், கலந்துகொள்ள அதிபர் ட்ரம்ப்பை  அழைக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளாராம். முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், மற்றும் ஒபாமாவை மெக்கெயின் அழைத்துள்ளார் என்றும் தெரிகிறது.

Sharing is caring!