அரசுப் பணத்தை அதிகமாக செலவழிக்கும் கனடா பிரதமர்

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுப் பணத்தை அளவுக்கு அதிகமாக செலவழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டி உள்ளார்.கனடா நாட்டில் பிரதமாராக பதவி வகிப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. அந்நாட்டின் எதிர்க்கட்சி கனடியன் கன்சர்வேடிவ் கட்சி ஆகும். இந்தக் கட்சி பிரதமரைப் பற்றி விமர்சனங்கள் கூறி வருகிறது. சமீபத்தில் இந்தக் கட்சியின் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறித்து வெளியிட்ட பதிவு கனடா முழுவதும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அந்த பதிவில், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். அதில் பல அலுவலகப் பயணம் எனக் கூறப்பட்டாலும் அவைகளில் சொந்தப் பயணமும் இணைந்துள்ளது. அதாவது விடுமுறையில் செய்ய வேண்டிய வெளிநாட்டுப் பயண சொந்த வேலைகளை அரசுப் பயணமாக செய்து முடிக்கிறார்.

அவர் வெளிநாட்டுப் பயணத்துக்கு இதுவரை 15 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவழித்துள்ளார். அவற்றில் பல பயணங்கள் தோல்வியில் முடிந்துள்ளன. உதாரணத்துக்கு சமீபத்தில் அவர் மேற்கொண்ட இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கிடையே மேலும் விரிசலை உண்டாக்கியது. அரசுப் பணத்தை அநியாயமாக செலவழித்துள்ளார்.

மேலும் வான்கூவரில் உள்ள சமையல்காரரான விக்ரம் விஜ் என்பவர் டில்லியில் ஒரு சந்திப்பில் பிரதமருக்கு ஒரு வேளை உணவு சமைத்தார். அதற்காக அந்த சமையல்காரருக்கு அரசுப் பணத்தில் இருந்து 17044 அமெரிக்க டாலரை ஜஸ்டின் ட்ரூடோ அளித்துள்ளார்.” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!