அரசை எதிர்பார்த்தால் அவ்வளவுதான்… கைக் கொடுத்த ஜமாத்தார்கள்

செம்பனார்கோவில்:
அரசை எதிர்பார்த்தால் அம்போதான் என்பதால் பள்ளி வாசல் ஜமாத்தார்கள் ஒன்று சேர்ந்து வாய்க்காலை தூர்வாரியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செம்பனார்கோவில் அடுத்து வடகரையில் ரூ.75,000 சொந்த செலவில் வாய்க்காலை தூர்வாரி குளத்திற்கு தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர் அப்பகுதி பள்ளி ஜமாத்தார்கள். அவர்களை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த வடகரை பகுதியில் மஞ்சளாறு என்ற தடுப்பணை உள்ளது. இந்த மஞ்சளாறு தடுப்பணையிலிருந்து தண்ணீரை தடுத்து மேமாத்தூர் , திருக்கடையூர் வழியாக கடலில் கலக்கிறது. இதே மஞ்சளாறு தடுப்பணையிலிருந்து வடகரை பகுதியிலிருந்து பாசனத்துக்காக பல வாய்க்காலில் தண்ணீர் பெற்று சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதி நிலத்தடி நீர் வாழ்வாதாரத்திற்காக குளங்கள், குட்டைகள் போன்றவற்றிற்கு தண்ணீர் தேக்கி வைப்பது வழக்கம். இப்படிப்பட்ட நிலையில் வடகரை பகுதியில் உள்ள குளத்திற்கு தண்ணீர் எடுத்து செல்லாத நிலையில் இருந்து வருகிறது.

கடந்த 12 ஆண்டிற்கு மேலாக மஞ்சளாறு தடுப்பணையிலிருந்து பிரிந்து வரும் ஓரகட்டளை வாய்க்காலை தூர் வாராமல் தூர்ந்து போய் பல மரங்கள், செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. இதனால் குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வந்திருக்கின்றனர்.

பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் வடகரை பகுதி பள்ளி ஜமாத்தார்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் தூர்வாரி குளத்திற்கு தண்ணீர் எடுத்து செல்ல முடிவெடுத்தனர். அதன்படி ஜமாத்தார்கள் ஒன்றுகூடி ரூ.75,000 செலவில் பொக்லைன் உதவியோடு மரங்கள், காடுகளை அழிந்து தூர்ந்துபோன வாய்க்காலை தூர்வாரி மஞ்சளாறு தடுப்பணையிலிருந்து குளத்திற்கு தண்ணீர் எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஜமாத்தார்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!