அறிவு பொக்கிஷத்தை வழங்கும் நூலகத்தின் பரிதாப நிலை மாற்றம் வருமா? மழையில் நூல்கள் சேதமாவது தவிர்க்கப்படுமா?

மணல்மேடு:
அறிவு என்ற பொக்கிஷத்தை வழங்கும் நூலகத்தின் பரிதாப நிலையை மாற்ற வேண்டும். புதிய கட்டிடத்தில் கிளை நூலகத்தை அமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணல்மேட்டில் இயங்கி வரும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிட வசதி செய்து தர வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் அரசுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர். மணல்மேடு பேரூராட்சியில் கடந்த 1986ம் ஆண்டு முதல் மாவட்ட நூலகத்துறை கீழ் கிளை நூலகம் இயங்கிவருகிறது.

சுமார் 1768 உறுப்பினர்கள் கொண்ட இந்த நூலகத்தில் தற்போது
1000 உறுப்பினர்கள் நடைமுறையில் உள்ளனர். எனினும் நூலகம் எவ்வித அடிப்படை வசதியின்றி உள்ளதால் வாசகர்கள் வருகை குறைந்து விட்டது. இந்த நூலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1500 அறிவியல் நூல்கள், சுதந்திரபோராட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாறு, கதைகள், கட்டுரைகள், புதினங்கள், தலைசிறந்த பழமையான நாவல்கள் என 18ஆயிரத்து 239 நூல்கள் உள்ளன.

கடந்த 1986ம் ஆண்டுமுதல் 2005ம் ஆண்டு வரை மணல்மேடு கடைவீதியில் இயங்கி வந்த நூலகம் தற்போது மணல்மேடு வெளளாளத்தெருவில் பழைய ஓட்டு கட்டடம் ஒன்றில் 2006.ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஓட்டுகட்டடம் என்பதால் உட்புறம் திறந்த வாசல் முற்றம் உள்ளது.

மழை காலத்தில் சாரல் மற்றும் நீர்கசிவு ஆகியவை காரணமாக புத்தகங்கள் சேதமடைந்து வருகிறது. மாணவர்களின் பொதுஅறிவை மேம்படுத்தும் விதமாக அரசு ஊராட்சி அளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகங்களை அமைத்துள்ளது. ஆனால் முதல்நிலை பேரூராட்சியில் உள்ள நூலகத்தில் வாசகர்கள் உட்கார்ந்து வாசிக்க இடமில்லாமல் இருப்பது பரிதாபத்திற்கு உரியது.

குடிநீர்வசதி உட்பட எவ்வித அடிப்படை வசதியில்லாமல் நூலகம் இருப்பதால் வாசகர்கள் நூல்களை தேடி எடுக்க கூட முடியாத  நிலையுள்ளது. இப்பகுதியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசுகல்லூரி மாணவ, மாணவிகள் நூலகத்திற்கு வந்தால் 5 நபருக்கு மேல் உட்கார்ந்து வாசிக்க முடியாது. அந்தளவிற்கு இடநெருக்கடி உள்ளது. அறிவு என்ன பொக்கிஷத்தை வழங்கும் நூலகத்தின் இந்த பரிதாப நிலையால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியுள்ளது

.எனவே மணல்மேடு பேரூராட்சி அலுவகம் அருகில் உள்ள பொதுபணித்துறை சொந்தமான இடத்தில் நூலக கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டநூலகத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாசகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் இந்த பரிதாபமான நூலகத்திற்கு விடிவு கிடைக்குமா? புத்தகங்கள் பாதுகாக்கப்படுமா?

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!