அவுஸ்திரேலியாவில் நவீன அடிமைச் சட்டமூலம்

அவுஸ்திரேலியாவில் நவீன அடிமைச் சட்டமூலம் (Modern Slavery Act) அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதலின் பின்னர் நவீன அடிமைச் சட்டமூலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அடிமை முறைமை , கட்டாய உழைப்பு , ஏமாற்றி பணியிலமர்த்தல் , ஆட்கடத்தல் மற்றும் கட்டாயத் திருமணம், உறுப்பு கடத்தல் என்பனவற்றை தடுக்கும் நோக்கில் இந்த நவீன அடிமை சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இயங்கும் பாரிய மற்றும் சிறிய வர்த்தக நிறுவனங்களினால் வேலையாட்கள் ஏமாற்றப்படுவது தொடர்பில் ஆண்டுதோறும் அறிக்கை தயாரிக்கப்படுகின்றது.

இதனிடையே, நவீன அடிமை சட்டமூலத்தினூடாக ஏனைய அரசுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கக்கூடிய வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றுள்ளதாக அந்நாட்டின் பிரபல சமூக நிறுவனமொன்றின் ஸ்தாபகர் அன்ரூ ஃபொரஸ்ட் (Andrew Forrest) தெரிவித்துள்ளார்.

உலகில் 40.3 மில்லியன் மக்கள் நவீன அடிமை முறைமையின் கீழ் காணப்படுவதுடன், அவர்களில் 25 மில்லியன் பேர் கட்டாய வேலையின் கீழும் 15 மில்லியன் பெண்கள் கட்டாயத் திருமண பிரச்சினையையும் எதிர்கொண்டுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Sharing is caring!