ஆங்கிலக் கால்வாயில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்

ஆங்கிலக் கால்வாயில் வேவ்வேறு இடங்களில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 அகதிகளை கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் நாளன்று அகதிகள் பலர் ஆட்கடத்தும் கும்பல் மூலம் சட்டவிரோதமாக, படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணியாமல் சாதாரண படகில் பயணம் செய்துள்ளனர்.

இதனையடுத்து ஒரு படகு பழுதடைந்ததால் அதில் பயணித்தவர்கள் நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகளில் மூலமாகவும் சென்று அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.

இவ்வாறு ஆங்கிலக் கால்வாயின் 5 இடங்களில் இருந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 40 அகதிகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட அனைவருக்கும் வைத்திய உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குழந்தைகள் 2 பேரும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த விபத்தில் மீட்கப்பட்ட பெரியவர்கள் குடியேற்ற அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதுடன் இவர்களில் சிலர் ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Sharing is caring!