ஆடிப்பெருக்கு விழா திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி:
ஆடிப் பெருக்கு விழாவை ஒட்டி இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடப்பது உண்டு. இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி 18 என்னும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

திருச்சி காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர், அகண்ட காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால், திருச்சி மாவட்ட மக்கள் ஆடிப்பெருக்கை உவகையுடன் கொண்டாட மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழாவை திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!