ஆந்திராவில் மாஜி அமைச்சரின் சொகுசுகார்கள் பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி

ஐதராபாத்:
ஆந்திராவில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் முன்னாள் அமைச்சரின் 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.,யும், முன்னாள் அமைச்சருமான ஓய்எஸ் சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் பெராரி, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட ஆறு சொகுசு கார்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில், தெலுங்கு தேச, எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சவுத்ரிக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீட்டில், வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை நடப்பதை, சவுத்ரிக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஒப்புக் கொண்டன. ‘போலி நிறுவனங்களின் இயக்குனர்கள், சுஜானா சவுத்ரியின் நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்துள்ளதை, அமலாக்க துறை கண்டுபிடித்துள்ளது. இதையொட்டி, இந்த சோதனை நடக்கிறது’ என, வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த சோதனை நடந்தது. இந்த சோதனையில், பெராரி, ரேஞ்ச் ரோவர், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் போலி நிறுவனங்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளன.

சுஜானா நிறுவனங்களில் செயல்பட்ட இயக்குநர்கள், சவுத்ரியின் உத்தரவின் பேரில் செயல்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. விசாரணைக்கு வரும் 27 ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சோதனையில் கிடைத்த ஆவணங்களில், இந்த சுஜானா நிறுவனம் 120 கம்பெனிகளை கட்டுப்படுத்தியதும், அவற்றில் பெரும்பான்மையானவை போலி எனவும் தெரியவந்துள்ளது.

இதில் பல நிறுவனங்களுக்கு சவுத்ரியின் உத்தரவாதத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!