ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் சலுகைகளுக்கு கிடுக்கிப்பிடி

புதுடில்லி:
கிடுக்கிப்பிடி போட்டுள்ளது மத்திய அரசு. ஆன்லைன் நிறுவனங்கள் அளிக்கும் சலுகைகளுக்கு.

மத்திய அரசு, வலைதள சந்தை நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு கடிவாளம் போடும் வகையில், மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

‘அமேசான், பிளிப்கார்ட்’ உட்பட வலைதள சந்தை நிறுவனங்கள், அதிரடி சலுகைகளை வழங்குவதால், கடைகளைவிட, குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கின்றன. இதனால் கடைகளில் பொருட்களை விற்பனை செய்வோர் பாதிக்கப்படுவதால் ‘வலைதள சந்தை நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

இதை ஏற்று, மின்னணு வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, வலைதள சந்தை நிறுவனங்கள், ‘சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்’ என, சப்ளையர்களை வற்புறுத்தக் கூடாது. வலைதள சந்தை நிறுவனங்கள், பங்கு முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தின் பொருட்கள் விற்பனையில் ஒரு வலைதள சந்தை நிறுவனத்தின் பங்கு, 25 சதவீதத்தை தாண்டக் கூடாது. வலைதள சந்தை நிறுவனங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை பின்பற்றியது தொடர்பான ஆண்டறிக்கை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரொக்கத்தை திரும்ப அளிக்கும், ‘கேஷ்பேக்’ திட்டம், ஒளிவு மறைவின்றி, நியாயமாக இருக்க வேண்டும் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், சலுகைகளை வாரி வழங்குவது கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!