ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான வறட்சி

தாலிபன் மற்றும் மற்ற பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்களுக்கு ஆளாகி ஏராளமானோர் பலியாகி வரும் ஆப்கானிஸ்தான் தற்போது கடுமையான வறட்சியாலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் மோசமான வறட்சி காரணமாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சி பலரின் எதிர்காலத்தை பாழாக்கி வருகிறது. பலர் இடம் மாற்றம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தாலிபான்களின் தாக்குதல்களுக்கு பயந்து இடம் பெயர்ந்த பொதுமக்கள் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் காபூலில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக அலையும் காட்சிகள் பரிதாபகரமாக உள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆப்கானிஸ்தான் நாட்டில் மழை பொழிவு குறைந்துள்ள நிலையில், கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் தண்ணீருக்காக பல மைல் தூரம்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 20 மாநிலங்களில் கடுமையான தண்ணீர் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விவசாயம் அடியோடு முடங்கி உள்ளது. விவசாயத்தை நம்பியுள்ள சுமார் 2 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை மையம், நாட்டில் நிலவும் வறட்சிக்கு 20 மில்லியன் ஆப்கானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பயங்கரவாதிகள் மற்றும் அரசு படைகளின் மோதல்காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 2,75,000 பேர் தங்கள் இருப்பிடத்தை மாற்றி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

Sharing is caring!